சிறுகதை: கதிரவன் குளித்து முடித்து, உடைகளை அணிந்து, அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது அவன் மகன் ஆகாஷ் வந்தான்.
ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஆகாஷ் ஒருநாளும் கதிரவன் அலுவலகத்திற்குச் செல்லும் நேரத்தில் எழும்புவதில்லை. அவன் சென்ற பிறகே படுக்கையிலிருந்து எழுந்து பள்ளிக்குப் புறப்படுவான்.
“அப்பா வெள்ளிக்கிழமை ஸ்கூல் டிரிப் போறோம்… இன்னைக்கு கன்ஃபர்ம் பண்ணனும்,” என்றான்.
ஒரு மாதத்திற்கு முன்பு இந்த டிரிப்பை பற்றி ஆகாஷ் கூறினான். அப்போது, “போ… முதல்ல நல்லா படி… மழை நேரம் டிரிப் போயிட்டு உடம்பு சரியில்லாம போயிட்டா கஷ்டம்…” என்றான் கதிரவன்.
இவ்வளவு நாள் பேசாமல் இருந்துவிட்டு, கன்ஃபர்ம் செய்யும் நாளன்று காலையில் வந்து கேட்கிறான்.
கிளம்பும்போது நின்று விசாரிக்க நேரமில்லை கதிரவனுக்கு.
“எவ்வளவு?” என்றான்.
“ஐநூறு ரூபா” என்றான் ஆகாஷ்.
கதிரவன், பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுத்துவிட்டு சென்றான்.
அலுவலகத்திற்குச் சென்றதும் எம்.டி. ஒரு பட்ஜெட் தன்னிடம் கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது கதிரவனுக்கு.
அவனது நிறுவனத்தின் தென்மண்டல கிளை ஊழியர்களுக்கு பயிற்சியரங்கம் நடத்துவதற்கான பட்ஜெட் அது. ஏற்கனவே கதிரவன் தயார் செய்து கொண்டு சென்றபோது, பல்வேறு கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்பியிருந்தார் எம்.டி. ஆனால், அவரது அனுமதியில்லாமல் பணத்தை செலவழிக்க இயலாது.
அடுத்த வாரம் எம்.டி. மலேசியா செல்ல இருப்பது நினைவுக்கு வந்தது கதிரவனுக்கு. இப்போது சென்றாலும் அவர் திருத்தங்கள் கூறுவார். தன் மகன் ஆகாஷ் செய்தது நினைவுக்கு வந்தது அவனுக்கு.
மூன்று நாள்கள் பொறுத்திருந்தான். எம்.டி. மலேசியா செல்வதற்கு முந்திய தினம் மாலை அவரைப் பார்க்கச் சென்றான்.
“என்ன கதிரவன்?”
“சார் அந்த டிரைனிங் பட்ஜெட் அப்ரூவல்…” இழுத்தான் அவன்.
“ஏதோ கொரி கேட்டிருந்தேனே…?”
“எல்லாம் சரி பண்ணிட்டேன் சார்…” பவ்யமாய் நீட்டினான் கதிரவன்.
“சரி பண்ணிட்டீங்களா…? நான் நாளைக்கு கிளம்பிட்டா வர்றதுக்கு பதினைஞ்சு நாள் ஆகும்… அதுக்குள்ளே டிரைனிங்குக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிருங்க…” என்றபடி கையெழுத்து போட்டு நீட்டினார் எம்.டி.
மனதுக்குள் மகனுக்கு நன்றி கூறினான் கதிரவன்.
இதையும் வாசியுங்கள்:சிறுகதை: பால்கனி நிலவு
கதைகளை உடனுக்குடன் வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்.