கடந்த வெள்ளிக்கிழமையன்று (2023 ஆகஸ்ட் 11)திருச்செந்தூரில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆசிரியர்கள் பாதி பெற்றோராகவும், பெற்றோர் பாதி ஆசிரியர்களாகவும் மாறி மாணவர்களை வழிநடத்த வேண்டும். எந்தக் குற்றத்தை தடுப்பதாக இருந்தாலும் அதில் சட்டத்தின் நடவடிக்கை பாதி, ஈடுபடுகிறவரின் மனமாற்றம் பாதி இருக்கவேண்டும். போதை பொருள் கடத்துகிறவர்களை காவல்துறை கைது செய்வதோடு, போதை பொருளை பயன்படுத்துகிறவர்களுக்கு அதன் தீமைகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாலும் பயன்பாட்டை தடுக்க முடியும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பள்ளி மாணாக்கர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் போதைப்பொருளின் தீமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்வண்ணம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் இந்து சூடன், ராமச்சந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தனர். திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் எம். குரு சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியை ஷீபா ஜெனி அமுதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆனந்த ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் கோ. சந்திரசேகர், பொருளாளர் ஜெகநாத பெருமாள், ஆலோசகர்கள் இசக்கிமுத்து, செந்தில்அதிபன், வீரமணி, நூலகர்கள் மாதவன், சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
இதையும் வாசியுங்கள்: திருச்செந்தூர் விரைவு ரயில் வேகம் அதிகரிப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-இல் பின்தொடருங்கள்.