முதுமை சுமையல்ல; தினமும் அரைமணி நேரம் இதைச் செய்யுங்கள்

முதுமையடையும்போது இதய ஆரோக்கியமே முதலிடம் பெறுகிறது. தினமும் விரைவாக நடக்கும்போது, உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு அளவு ஆகியவை குறைகிறது.
Spread the love

முதுமை: “வயசாகிப் போச்சு” என்று மனதாலும் உடலாலும் முடங்கிப் போகாமல் தினமும் நடப்பது முதியவர்களின் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று உடல் நல ஆலோசகர்கள் கூறுகின்றனர். நடத்தல் என்பது ஏரோபிக் உடற்பயிற்சியில் அடங்கும்.

உடற்பயிற்சி என்றதும், ஜிம்முக்கு செல்வது, வெவ்வேறு பயிற்சிகளை செய்வது என்று குழப்பிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. அதிலும் முதியவர்கள் அப்படிச் செய்ய வேண்டியதில்லை. வயதை பொறுத்து அவர்கள் வேறு பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் கவனமாக இருக்கவேண்டும்.

D Bros Media

ஏரோபிக் என்ற வார்த்தைக்கு “ஆக்ஸிஜன் உடன்” அதாவது உயிர்வளி, பிராணவாயு உடன் இணைந்தது என்று பொருளாகும். நீங்கள் சுவாசிக்கும் அளவானதே, உங்கள் தசைகளுக்கு எவ்வளவு உயிர்வளி (ஆக்ஸிஜன்) கிடைக்கிறது என்பதை நிர்ணயிக்கக்கூடியதாகும். பொதுவாக ஏரோபிக் உடற்பயிற்சி என்பது, இதயதசைகளுக்கானதாகும். ஏரோபிக் உடற்பயிற்சி செய்யும்போது, உங்கள் இதயம் சுருங்கி விரிகிறது. இதயமானது உங்கள் உடல் முழுவதும் இரத்தத்தை வெகுவேகமாக செலுத்துகிறது; உங்கள் நுரையீரல்களுக்கு அதிக ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுகிறது.

பொதுவாகவே உடற்பயிற்சியானது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உடல் தசைகளின் வலிமையை பாதுகாக்கிறது. இதய நலனுக்கு உதவுகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது. நீரிழிவு போன்ற நாள்பட்ட வியாதிகளின் பாதிப்பை குறைக்கிறது.

உடற்பயிற்சியும் மூளையும்

உடற்பயிற்சியானது, நினைவுதிறனையும், சிந்திக்கும் திறனையும் அதிகரிக்கிறது என்று தற்போது கூறப்படுகிறது. மூளையில் புதிய இரத்த நாளங்களின் வளர்ச்சி மற்றும், மூளையின் புதிய செல்களின் முழுமையான திறன், செயல்பாடு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான வளர்ச்சிக் காரணிகளான வேதிப்பொருள்களின் உற்பத்திக்கான உடலியல் மாற்றங்களை உடற்பயிற்சிகள் தூண்டுகின்றன.

உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கு சிந்திக்கும் திறன் மற்றும் நினைவுதிறன் ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளைப் பகுதிகள், உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு இருக்கின்ற அளவை விட அதிகமாக இருப்பதாக அநேக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடற்பயிற்சி அளவு

வாரத்திற்கு 150 நிமிடம், விரைவாக நடப்பதன் மூலம் நல்ல பலனை பெற்றுக்கொள்ளலாம். வாரத்திற்கு 5 நாள், தினமும் அரைமணி நேரம் நடப்பதன் மூலம் வாரத்திற்கு 150 நிமிடம், அதாவது மொத்தத்தில் இரண்டரை மணி நேரம் நடக்கலாம். ஆகவே, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும். ஒரே நாளில் என்றில்லாமல் நாளுக்கு 5 நிமிடம், 10 நிமிடம் என்று அதிகரித்து, தேவையான நேரம் உடற்பயிற்சி செய்வதற்கு உடலையும் மனதையும் பழக்கப்படுத்திக்கொள்ளலாம்.

புத்திக்கூர்மையுடன் தொடர்புடைய திட்டமிடல், நினைவுதிறன், கவனம், பிரச்னைகளை தீர்த்தல், உரையாடல் ஆகியவற்றை சரியானபடி செய்வதற்கு மூளைக்கு உடற்பயிற்சி உதவுகிறது.

இதயத்தை காக்கிறது
முதுமையடையும்போது இதய ஆரோக்கியமே முதலிடம் பெறுகிறது. தினமும் விரைவாக நடக்கும்போது, உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு அளவு ஆகியவை குறைகிறது. மாரடைப்பு அல்லது இதய நோய் பாதிக்கும் அபாயம் குறைகிறது. தினமும் நடக்கிறவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 30 முதல் 50 சதவீதம் குறைகிறது என்றும், வாரத்திற்கு சில நாள் நடக்கிறவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 15 முதல் 20 சதவீதம் குறைகிறது என்றும் கூறுப்படுகிறது.

இரத்த சர்க்கரை
சில சமயங்களில் சாப்பிட்டவுடன் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். நீங்கள் நடக்கும்போது இயல்பாகவே இரத்த சர்க்கரையின் அளவு குறையும். சாப்பிட்ட பிறகு கால் மணி நேரம் நடந்தால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கு பதிலாக, உடலின் தசைகள் பெலப்படுவதற்கு அந்த சர்க்கரை உதவும்.

வலி குறையும்
முதுமையில் சிலருக்கு ஒரு நிமிடம் கூட நடக்க இயலாததுபோன்ற நிலை இருக்கும். ஆனால், உடலுக்கு மென்மையான பயிற்சி அளிப்பதற்கு நடப்பதே ஏற்றது. மூட்டுகள், முதுகு போன்ற பகுதிகளில் உள்ள தசைகளை நடப்பது பெலப்படுத்துகிறது. தொடர்ந்து நடக்கும்போது முக்கியமான தசை தொகுப்புகள் வலுவடைகின்றன. ஆகவே, பொதுவாக மூட்டுகள், முதுகு போன்ற பகுதிகளில் இருக்கும் வலி, நடைபயிற்சி செய்ய செய்ய குறையும்.

மன நிம்மதி
உடல் பயிற்சியில் ஈடுபடும்போது, அதாவது நடக்கும்போது எண்டோர்பின் சுரக்கிறது. இது மனக்கலக்கத்தை போக்குகிறது. உங்களை சந்தோஷமாக உணரச் செய்கிறது. மனதில் நேர்மறையான எண்ணம் தோன்றச் செய்கிறது.

நோய் எதிர்ப்பு ஆற்றல்

உடல் முதுமையடையும்போது, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைகிறது. நடைபயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை நல்லமுறையில் பெருக்க முடியும். உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு, பயிற்சி செய்யாத முதியவர்களைக் காட்டிலும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கும்.

இன்றைக்கு உடற்பயிற்சி செய்துவிட்டு நாளைக்கு பலனை எதிர்பார்க்கக்கூடாது. மாறாக, தொடர்ந்து ஆறு மாதங்கள் சீராக உடற்பயிற்சி செய்கின்றவர்கள் பலனை காண முடியும் என்றும் உடல்நல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற உடல்நலக் கட்டுரைகளை உடனடியாக வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்!

High Lights Studio