சிறுவர் கதை: கிரிக்கெட் பிளேயர்

சிறுவர் கதை: ஒருநாளாவது கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்த்துவிடவேண்டும் என் ற ஆசை எத்தனையோ வருடங்களாக அவனுக்கு இருக்கிறது.
Spread the love

சிறுவர் கதை: அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட ஹரீஷுக்கு ஆச்சரியமாக இருந்தது. புதிதாக டி20 கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியிருக்கும் சௌந்தர், அம்மாவின் சொந்தக்காரர் என்றே அவனால் நம்ப இயலவில்லை.

ஒருநாளாவது கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்த்துவிடவேண்டும் என் ற ஆசை எத்தனையோ வருடங்களாக அவனுக்கு இருக்கிறது. மூன்றாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே அவன் அப்பாவிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறான். இதோ, ஆறாம் வகுப்பு வந்து விட்டான் இன்னும் அப்பா அவனை அழைத்துச் சென்றபாடில்லை.

D Bros Media

எப்போதும் “பாடத்தை ஒழுங்கா படி… மற்றதை பிறகு பார்க்கலாம்…” என்று கண்டிப்பாக கூறிவிடுவார் அப்பா.

“அம்மா, அப்பா என்னம்மா எப்போதும் படி படின்னு சொல்றாரு… எங்க ஸ்கூல்ல ரொம்ப நல்லா படிச்ச அண்ணன்மாருக்கே மெடிக்கல் சீட் கிடைக்கலை…”

“டேய் உன்னை மெடிக்கல்தான் படிக்கணும்னு அப்பா சொல்லலை… நல்ல மார்க் வாங்குன்னுதான் சொல்றாரு… மற்றவங்களுக்கு கிடைக்காம இருக்கிறது நிறைய காரணம் இருக்கலாம்… உனக்கு வாய்ப்பு கிடைச்சா படிக்கலாம்…” என்பார்கள் அம்மா.

ஆனால், ஹரீஷுக்கு ஆர்வம் முழுவதும் கிரிக்கெட் மேலேயே இருந்தது. இப்போது அம்மாவும் அப்பாவும் பேசியதை கேட்டுவிட்டதால் அவனால் ஆர்வத்தை அடக்க இயலவில்லை.

“அம்மா, உண்மையா… அந்த பிளேயர் நமக்குச் சொந்தமா?”

“ஆமாடா… அவன் உனக்கு அண்ணன் முறை வேணும்… எனக்கு பெரியம்மா மகளுடைய பையன்…”

“அம்மா ஒருநாள் அவரை நேரில் பார்க்கணும்மா…”

“பெரியம்மா கிட்டே பேசிடுறேன்… ஒருநாள் போகலாம்…” – கூறியபடியே அம்மா, சௌந்தரின் அம்மாவிடம் போனில் பேசிவிட்டாள்.

“வர்ற சனிக்கிழமை சௌந்தர் வீட்ல இருப்பானாம்… போகலாம்…” – ஹரீஷுக்கு பள்ளியில் தன் நண்பர்களிடம் சொல்லி தீரவில்லை.

சனிக்கிழமைக்காக அவன் காத்திருந்தான்.

அன்று காலையில் எழுந்து அவன் தயாராகிவிட்டான்.எந்த சொந்தக்காரர்கள் வீட்டுக்குமே வராத அப்பாவும் கிளம்பியது ஹரீஷுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ஹாய்…” – ஹரீஷை பார்த்து கையசைத்தான் சௌந்தர்.

“வாங்க சித்தி, சித்தப்பா,” என்று அம்மாவையும் அப்பாவையும் அவன் வரவேற்றது ஹரீஷுக்கு நம்ப முடியாமல் இருந்தது.

“வாங்க… எத்தனை வருஷமாச்சு… ஆனால் சௌந்தர் காலேஜ் பக்கத்தில உங்களை பார்ப்பேன்னு சொல்லுவான்,” என்றார்கள் சௌந்தரின் அம்மா, அப்பாவிடம்.

“என்னோடே ஆபீஸ் பக்கம்தான் அவன் காலேஜ்… அடிக்கடி பார்த்துப்போம்… இப்போ ஹரீஷ், சௌந்தரை பார்த்தே ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சதால வந்தோம்…” என்றார் அப்பா.

“ஏண்டா… பெரியம்மா பார்க்கவேண்டாம் உனக்கு… அவனைதான் பார்க்கணுமா?” என்று சௌந்தரின் அம்மா கேட்டபோது ஹரீஷுக்கு கூச்சமாக இருந்தது.

சௌந்தர், ஹரீஷை தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

சௌந்தரின் கிரிக்கெட் பேட்டை தொட்டுப் பார்த்தான் ஹரீஷ். அங்கே பழைய போட்டோ ஆல்பம் ஒன்று இருந்தது. அதில் பழைய கிரிக்கெட் வீரர்களுடன் சௌந்தர் இருக்கும் போட்டோக்கள் இருந்தன.

வேறு சில வீரர்களை அடையாளம் தெரியவில்லை ஹரீஷுக்கு.
“அண்ணா, இவங்க யாரு?” என்று கேட்டான்.

“இவங்க எங்கூட ஸ்கூல்ல, காலேஜ்ல படிச்சவங்க…”

“இவங்களும் கிரிக்கெட் பிளேயர்ஸா?”

“ஆமா…”

“ஆனா எந்த டீமிலும் இவங்களை நான் பார்க்கலையே…?” என்று கேட்டான் ஹரீஷ்.

“ம்ம்… நல்ல பிளேயர்ஸ்தான்… ஆனா அவங்க விளையாடற டைம்ல எந்த பெரிய டீமிலும் இடமில்லை… ஆனா எல்லோரும் நல்ல வேலைல இருக்கிறாங்க…” என்றான் சௌந்தர்.

“அவனுக்கு முன்னாடி காலேஜ்ல விளையாடின நிறைய பையங்களுக்கு எந்த டீமிலேயும் இடம் கிடைக்கலை… ஆனால் இவன் இடம் கிடைக்கலைன்னாலும் பரவாயில்லை கிரிக்கெட்தான் விளையாடுவேன்னு சொல்லிட்டான்,” பெரியம்மா, அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.

சௌந்தர் அண்ணனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டான் ஹரீஷ்.

“யாருக்கு எது கிடைக்கணும்னு இருக்குதோ அதுதான் கிடைக்கும்… அதுக்காக முயற்சி பண்ணாம போயிரக்கூடாது,” என்றார்கள் பெரியம்மா.

பெரியம்மா வீட்டிலிருந்து திரும்பும்போது ஹரீஷ், “அப்பா… நான் நல்லா படிக்கிறேன்… மெடிக்கல் கிடைக்கலைன்னாலும் பரவாயில்லை,” என்றான்.

அம்மா ஹரீஷை அணைத்துக்கொண்டார்கள்.

இதையும் வாசியுங்கள்: சிறுவர் கதை: கோல்டன் கலர் ஃபிஷ்

கதைகளை உடனுக்குடன் வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்.

High Lights Studio