சிறுவர் கதை: ஓர் ஊரில் ஒரு மலை இருந்தது. அந்த மலையிலிருந்து பொந்துகளுக்குள் ஏராளமான எலிகள் வசித்தன. அவை அங்கு கிடைக்கும் கிழங்குகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தன.
அந்த மலையில் ஒரு குரங்குகளும் இருந்தன. அவை மலையில் மரங்களில் இருந்த கனிகளை சாப்பிட்டன. ஒரே மலையில் வசித்தால், எலிகளும் குரங்குகளும் நட்பாய் பழகி வந்தன.
இதையும் வாசியுங்கள்: சிறுவர் கதை: ஆபத்தில் சிக்கிய குருவிகள்
ஒருநாள், எங்கிருந்தோ ஒரு கரடி அந்த மலையின்மேல் ஏறி வந்தது. அங்கிருந்த கிழங்குகளை, பழங்களை அது சாப்பிட்டது. மலையின்மேல் எலிகள் அதிகமாக இருப்பதைக் கண்ட கரடி, மகிழ்ச்சியோடு எலிகளைப் பிடித்து தின்றது.
ஆகவே, எலிகள் குரங்குகளிடம், “இந்தக் கரடியிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்,” என்று கேட்டுக் கொண்டன.
குரங்குகளின் தலைவன், கரடியைப் பார்த்து, “கரடி அண்ணா, கரடி அண்ணா, இந்த மலையில் போதுமான அளவு கிழங்குகளும், பழங்களும் கிடைக்கின்றன. எலிகளை விட்டுவிடு. அவை பாவம்… அவற்றை தின்னாதே,” என்று கேட்டுக்கொண்டது.
ஆனால் கரடி, “எலிகளை விட்டுவிடுவதா? எலிகள்தான் சுவையான சாப்பாடு,” என்று கூறி, தொடர்ந்து எலிகளை விரட்டிப் பிடித்தது.
ஆகவே, எலிகளும் குரங்குகளும் சேர்ந்து கரடிக்கு முடிவு கட்ட ஒருநாளை எதிர்பார்த்திருந்தன.
ஒருநாள் கரடி ஒரு குரங்கிடம், “எங்கேயாவது மரத்தின் தேன்கூடு இருந்தால் சொல். தேன் எனக்கு ரொம்ப பிடிக்கும்,” என்றது.
அதை அந்தக் குரங்கு தங்கள் தலைவனிடம் கூறியது. குரங்குகளின் தலைவனுக்கு மலையின் உச்சியில் நிற்கும் மரத்தில் தேன்கூடு இருப்பது நினைவுக்கு வந்தது. மரம் நிற்கும் பகுதிக்கு மறுபுறம் அதலபாதாளமாக இருக்கும்.
குரங்குகளின் தலைவன் அந்த இடத்துக்கு குரங்குளையும் எலிகளையும் அழைத்துச் சென்றது. தேன்கூடு இருக்கும் மரத்தின் கிளைகளில் உறுதியான கொடிகளை கட்டியது குரங்கு தலைவன். நன்றாக கட்டப்பட்ட கொடிகளை இழுத்து மறுபுறம் நிற்கும் மரங்களின் அடியில் கட்டியது. இவ்வாறு பல கொடிகளை கட்டியது. தேன்கூடு இருக்கும் மரம் ஒருபுறம் சரிந்து நின்றது.
குரங்குகளின் தலைவன் ஒரு குரங்கை நோக்கி, “நாங்கள் மறைந்து கொள்கிறோம். நீ போய் இங்கே தேன்கூடு இருக்கிறது என்று கூறி கரடியை அழைத்து வா,” என்று கூறியது. பின்பு அது எலிகளுக்கு சில ஆலோசனைகளை சொன்னது.
சிறிது நேரத்தில் கரடி தேன்கூட்டைத் தேடி வந்தது. குரங்கு, மரத்தின் உச்சியில் இருக்கும் தேன்கூட்டை காட்டியது.
இதையும் வாசியுங்கள்: சிறுவர் கதை: முதலையின் நண்பன்
“ஆஹா… எவ்வளவு பெரிய தேன்கூடு…!” என்றபடி கரடி மரத்தின்மீது ஏறியது. தேன்கூட்டை நெருங்கி, தேனை எடுத்து சாப்பிட்டது. தேனின் சுவையில் அது தன்னை மறந்திருக்கும்போது, குரங்குகளின் தலைவன், எலிகளுக்கு சைகையால் கட்டளையிட்டது.
குரங்குகளின் தலைவன் கை காட்டியதும் எலிகள் விரைவாக மரத்தை கட்டியிருந்த தாவர கொடிகளை ஒரே நேரத்தில் பற்களால் அறுத்தன. கொடிகள் அறுந்ததும், இழுத்துக் கட்டப்பட்டிருந்த மரம் வேகமாக பழைய நிலைக்குத் திரும்பியது. எதிர்பாராமல் மரம் அசைந்ததால், கரடி நிலைதடுமாறி மலை உச்சியிலிருந்து அதலபாதாளத்திற்குள் விழுந்து, உடல் சிதறி மடிந்தது.
எலிகள் குரங்குகளுக்கு நன்றி சொல்லின. அதன்பின் பயமில்லாமல் வாழ்ந்தன.
நீதி: மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவித்தால், நமக்கு ஒருநாள் ஆபத்து வரும்.
புதிய சிறுகதைகளை உடனடியாக வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; டுவிட்டரில் பின்தொடருங்கள்.