சிறுவர் கதை: பார்பி, வீட்டின் அருகிலிருந்த பூங்காவின் இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவள் சிறுவயதிலிருந்தே இந்தப் பூங்காவில்தான் விளையாடி வருகிறாள். வீட்டுக்கு அருகிலேயே இருப்பதால் அம்மா, அவளை தைரியமாக அனுப்பி வைப்பார்கள்.
போன வாரம் வரைக்கும் மாலையாகிவிட்டால் நிறைய ஃப்ரண்ட்ஸ் பூங்காவுக்கு வருவார்கள். பார்பி அவர்களோடு சேர்ந்து சறுக்கியும், ஊஞ்சலில் ஆடியும் விளையாடுவாள். பூங்காவினுள் இருக்கும் சிறிய மைதானத்தில் சிலமுறை பந்தும் விளையாடுவார்கள்.
Also read: சிறுகதை: பிடிக்காத பாடம்
ஆனால், இந்த தேர்வு முடிந்த பிறகு பார்பி, ஒன்பதாம் வகுப்புக்குச் செல்லவேண்டும். ஆண்டு தேர்வு நெருங்கிவிட்டதால் எந்தப் பிள்ளையுமே பூங்காவுக்கு வருவதில்லை.
அம்மா, இப்போதெல்லாம் கேம் விளையாட மொபைல் போன் தருவதேயில்லை. எவ்வளவோ கெஞ்சியும், “இனி நீ ஒன்பதாம் வகுப்பு போறே… படிக்கிறதுக்கு நிறைய பாடம் இருக்கும்..” என்று சொல்லிவிட்டார்கள்.
பூங்காவிலிருந்த கல் பலகையில் கவலையோடு உட்கார்ந்திருந்தாள் பார்ப்பி. அப்போது அவள் அருகே ஒரு வண்ணத்துப் பூச்சி பறந்து வந்தது. அழகாக பல்வேறு வண்ணங்கள் அதன் இறக்கையில் இருந்தன. சுறுசுறுப்பாக அங்குமிங்கும் பறந்தது வண்ணத்துப் பூச்சி. முதலில் அதைக் கவனித்த பார்பி, பின்னர் சிந்தனையில் மூழ்கிப்போனாள்.
“பார்பி… பார்பி…”
தன்னைக் கூப்பிடுவது யார்? என்று சுற்றுமுற்றும் பார்த்தாள் பார்பி.
“நான்தான் கூப்பிடுகிறேன்…” என்ற குரல் கேட்டது.
அருகில் வண்ணத்துப்பூச்சியை தவிர யாருமேயில்லை.
“நான்தான் வண்ணத்துப்பூச்சி பேசுகிறேன்..”
“ஆ… வண்ணத்துப்பூச்சியா?” என்று ஆச்சரியப்பட்டாள் பார்பி.
Also read: சிறுவர் கதை: ஆபத்தில் சிக்கிய குருவிகள்
“நான்தான்… நீ ஏன் கவலையாக இருக்கிறாய்?” என்று கேட்டது வண்ணத்துப் பூச்சி.
“முன்னே எல்லாம் எவ்வளவு சந்தோஷமாக விளையாடுவேன்… இப்போ பாரு… ஒன்பதாம் வகுப்பு போகப்போறே… அதனால படின்னு அம்மா சொல்றாங்க,” என்றாள் பார்பி.
“படிக்கிறது நல்லதுதானே… படி பார்பி,” என்றது வண்ணத்துப் பூச்சி.
“உனக்கென்ன… நல்லா அழகா இருக்கிறே…? சும்மா இந்த பூங்காவை சுத்தி சுத்தி பறக்கிறே… பள்ளிக்கூடம் போக வேண்டியதில்லை… படிக்க வேண்டியதில்லை..” என்றாள் பார்பி.
“பார்பி… இப்போதான் நான் அழகா இருக்கேன்… இதற்கு முன்னால எப்படி இருந்தேன் தெரியுமா? முதலில் செடியினுடைய இலைகளை சாப்பிட புழுவா இருந்தேன். அப்போ அசிங்கமாக இருந்தேன்… மெதுவாக மெதுவாக ஊர்ந்துதான் என்னால போக முடியும்… பிறகு, என்னைச் சுற்றி கூடு கட்டிகிட்டு அதுக்குள்ளே இருந்தேன்… ஒரே இருட்டு.. எங்கேயும் போக முடியாது. ஒரே இடத்தில உட்காந்து இருக்கணும்… ஒருநாள் அந்தக் கூடு உடைஞ்சு வெளியே வந்தேன்… அப்போதுதான் கலர் கலரான இறக்கையோட வண்ணத்துப் பூச்சியா என்னால் பறக்க முடிஞ்சுது…” என்று விளக்கியது வண்ணத்துப் பூச்சி.
“ஒரே இடத்துல இருட்டுக்குள்ள இருந்தியா?” ஆச்சரியமாக கேட்டாள் பார்பி.
“ஆமா… சின்ன வயசுல நீ விளையாடினே… இப்போ படிக்கவேண்டிய வயசு… நாலு வருஷம் நல்லா படிச்சிட்டா, பிறகு உனக்கு விருப்பமான உயர்படிப்பு படிச்சு சமுதாயத்தில புகழோட சந்தோஷமாக வாழலாம். நல்ல எதிர்காலத்துக்காக கொஞ்சம் கட்டுப்பாடோட இருக்கிற தப்பே இல்லை… புழுவா இருந்த நான் கூட்டுக்குள்ள இருந்ததால இன்னைக்கு அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறியிருக்கேன்…”
“சரி வண்ணத்துப்பூச்சி… நான் அம்மா சொல்ற மாதிரி படிக்கிறேன்…” என்று சந்தோஷமாக ஒப்புக்கொண்டாள் பார்பி. அவளது கவலை மறைந்துபோயிருந்தது.