சிறுவர் கதை: விஜயபுரி தேசமே அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. மக்கள் தங்கள் தங்கள் வீடுகளிலும் தெருக்களிலும் கட்டியிருந்த தோரணங்கள் தேசத்திற்கே அழகான தோற்றத்தை கொடுத்தன.
ஆண்டுக்கு ஒருமுறை அந்த தேசம் அப்படி விழாக்கோலம் கொள்ளும். அதற்குக் காரணம் தேசத்தின் ராஜா அன்றைய தினம் தன் குடிமக்களுக்கு வெகுமதி அளிப்பதுதான்.
வருடத்தில் ஒருமுறை விஜயபுரி ராஜா நாட்டு மக்களை தன் அரண்மனை தோட்டத்திற்கு அழைப்பார். அவர்களுக்கு விருந்து வைப்பார். அரண்மனையில் பெரிய கொண்டாட்டம் நடக்கும். மாலையில் அனைவருக்கும் வெகுமதி ஒன்றை அளித்து அனுப்புவார்.
விஜயபுரி மக்கள் யாரும் ஏதாவது வியாபாரம், வேலை என்று வேறு தேசத்திற்கு சென்றிருந்தாலும் குறிப்பிட்ட அந்த நாளில் நாட்டுக்குத் திரும்பிவிடுவார்கள்.
நாட்டு மக்கள் அனைவரும் அரண்மனை தோட்டத்திற்கு வந்து விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஊருக்குள் எந்த வீட்டிலும் ஆளே இல்லை. அனைவரும் அரண்மனைக்குச் சென்றிருந்தனர்.
அப்போது குதிரையில் இரண்டு பேர் நாட்டுக்குள் வந்தனர். வேறு தேச குடிமக்கள் போல் ஆடை அணிந்திருந்தனர். வெறிச்சோடி கிடக்கும் தெருக்களை பார்த்தனர்.
அவர்கள் குதிரைகளில் சென்று கொண்டிருந்தபோது, ஒரே ஒரு வயலில் ஒரே ஒரு குடியானவன் வேலை செய்து கொண்டிருந்தான். ஊரிலேயே யாருமில்லாத நேரத்தில் ஒருவன் மட்டும் வயலில் வேலை செய்வது வித்தியாசமாக தோன்றியது.
“பெரியவரே…” – குதிரையில் இருந்த ஒருவர் அழைத்தார்.
இதையும் வாசியுங்கள்: சிறுவர் கதை: முதலையின் நண்பன்
“பெரியவரே…” இரண்டு முறை அழைத்தபின்னரே அவர் திரும்பினார்.
“ஊருக்குள் யாருமே இல்லை… நீர் மட்டும் என்ன செய்கிறீர்?” குதிரையில் வந்தவர் கேட்டார்.
“எல்லோரும் ராஜா வீட்டுக்குப் போயிருக்கிறார்கள்…” – பெரியவர் பதில் கூறினார்.
“நீர் போகவில்லையா…?”
அவர் மறுப்பாக தலையசைத்தார்.
“ராஜா என்ன கொடுப்பார்?” – இன்னொருவர் கேட்டார்.
“விருந்து கொடுப்பார்… வெகுமதி கொடுப்பார்…”
“பிறகு ஏன் நீர் போகவில்லை… இது ராஜ துரோகமல்லவா?” குதிரைக்காரர்களில் ஒருவர் கேட்டார்.
“வேலை செய்யாமல் இருப்பதுதான் ராஜ துரோகம். நான் குடியானவனாக என் வேலையை, விவசாயத்தை செய்கிறேன்… இது நிரந்தர வருமானம்… ராஜா கொடுப்பது வருஷத்துக்கு ஒருமுறை… அவரது சந்தோஷத்திற்காக..” என்றார் பெரியவர்.
“உம்முடைய சந்தோஷம் எது… வெகுமதி பெறுவதில் இல்லையா?”
“நான் உழைத்து, அறுவடை செய்து, நானும் சாப்பிட்டு, அதை மக்களுக்கு விற்று, அதில் ராஜாவுக்கு வரி கட்டுகிறேன்… குடியானவனாக என் கடமை அதுதான்…” என்றார் பெரியவர்.
அந்த இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
மறுநாள் –
அந்தப் பெரியவரின் வீட்டின் முன்பு ஒரு ரதம் வந்து நின்றது. அரண்மனை பணியாள், ராஜா அவரை அழைப்பதாக ரதத்தில் ஏற்றி அழைத்துச் சென்றான்.
ராஜா வாசல் வரை வந்து பெரியவரை வரவேற்றார்.
“நீர்தான் மெய்யான ராஜ பக்தி உள்ளவர். உழைப்பதையும் விட மாட்டீர். ஆகவே, உம் வயலில் வேலை செய்த நேரம் போக மீதி நேரம் ராஜாவுக்கு ஆலோசகராக பணியாற்ற உத்தரவிடுகிறேன்,” என்று ஆணியிட்டார் மன்னர்.
ஆம், அன்று நகர்வலம் வந்தவர்கள் மாறுவேடத்தில் ராஜாவும் அவரது மெய்க்காவலரும்தான்.
நீதி: நம் உழைப்பே நமக்கு நிரந்தர மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.
உங்கள் கருத்துகளை கமெண்ட் செக்சனில் பதிவு செய்யுங்கள்.
கதைகளை உடனுக்குடன் வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; டுவிட்டரில் பின் தொடருங்கள்.