சிறுவர் கதை: கழுதைகள் வாழும் அந்த ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்ற கழுதை இளவரசன் அன்று இரவு வர இருந்தான். இரவு கழுதை இளவரசனை வரவேற்கச் செல்ல கழுதை ராஜா அனைவரையும் ஏர்போர்ட்டுக்கு வரச் சொல்லியிருந்தார். இளவரசனை வரவேற்றதும் அரண்மனை தோட்டத்தில் அறுசுவை உணவு விருந்து உண்டு என்று கழுதை ராஜா அறிவித்திருந்தார்.
அந்த ஊரில் ஒரு கழுதைக் குட்டி இருந்தது. அதன் பெயர் டாங்கு. டாங்கு குட்டியின் அப்பாவும் அம்மாவும் கழுதை இளவரசனை வரவேற்க செல்ல ஆயத்தமானார்கள்.
“டாங்கு, ராத்திரி 10 மணிக்கு வீட்டிலிருந்து போக வேண்டும். தயாராக இரு,” என்று கூறியது அம்மா கழுதை.
“தூங்கணும்னா சாயங்காலமே தூங்கி எழும்பிரு. ராத்திரி தூங்க முடியாது,” என்றது அப்பா கழுதை.
“அம்மா, விருந்தில என்னவெல்லாம் குடுப்பாங்க,” கேட்டது டாங்கு.
“எல்லாமே இருக்கும்டா,” என்றது தாய் கழுதை.
“ஐஸ் கிரீம் இருக்குமா?”
“ஐஸ் கிரீம், பாப்கார்ன், பஞ்சுமிட்டாய் எல்லாம் இருக்கும்”
அம்மா கூறியதும் ஆசை அதிகமானது டாங்குவுக்கு.
சாயங்காலமெல்லாம் ஊரைச் சுற்றி விளையாடிய டாங்குவுக்கு பொழுது அடையும் நேரத்தில் வழக்கம்போல் உறக்கம் வந்தது.
டாங்கு கட்டிலில் ஏறி படுக்கச் சென்றது.
“டாங்கு, இப்போ படுக்காதே… 10 மணிக்கு எழும்ப மாட்டே…” என்று அதட்டியது அப்பா கழுதை.
டாங்குவுக்கோ தூக்கமாக வந்தது.
வீட்டுக்கு வெளியே சென்ற டாங்கு, புதர் மறைவில் படுத்துக்கொண்டது. இரவு வந்தது. எங்கும் இருள் சூழ்ந்தது.
9 மணிக்கு டாங்குவின் அப்பாவும் அம்மாவும் டாங்குவை தேடினார்கள்.
“டாங்கு… டாங்கு…” அவர்கள் சத்தமாய் கூப்பிட்டும் பதில் இல்லை.
“எங்கேயாவது தூங்குவான்… வா போகலாம்,” என்று கூறி டாங்குவின் அப்பா, அம்மாவை அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரும் கழுதை இளவரசனை வரவேற்கச் சென்றனர்.
ஊரே திரண்டிருந்தது. கழுதை இளவரசன் விமானத்தில் வந்து இறங்கினான். அனைவரும் கழுதை இளவரசனை வரவேற்று அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.
அரண்மனை தோட்டத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் வயிறார சாப்பிட்டு வீடு திரும்பினர்.
விடியும்போது டாங்குவுக்கு விழிப்பு வந்தது. பதறியடித்து எழும்பி டாங்கு அரண்மனையை நோக்கி ஓடியது.
அரண்மனை கோட்டைக் கதவு மூடியிருந்தது. அரண்மனைக்கு வெளியே ஐஸ்கிரீம் கப்புகளும், பாப்கார்ன் கவர்களும், பஞ்சுமிட்டாய் குச்சியும் சிதறி கிடந்ததை கண்டு ‘ஓ’ வென்று அழுது கொண்டு உட்கார்ந்தது டாங்கு கழுதைக் குட்டி.
நீதி: உறக்க மயக்கத்தில் கடமை தவறக்கூடாது