சிறுவர் கதை: ஒரு குளத்தில் ஏராளமான மீன்கள் வசித்து வந்தன.
புதிதாக ஒரு மீன் குஞ்சு பிறந்தது. அது அழகாக தங்க நிறத்தில் இருந்தது. அதற்கு அதன் அம்மா கோல்டா என்று பெயர் வைத்தது.
கோல்டா மீன் குஞ்சு குளத்தில் அங்குமிங்கும் நீந்தியது. தாய் இருக்கும் இடத்திலிருந்து தொலைவான இடங்களுக்குச் சென்றது.
ஒவ்வொருமுறையும் அம்மா மீன் சென்று அதை தேடி அழைத்து வரும்.
ஒரு முறை அம்மா மீன், “கோல்டா, நீ என்னைவிட்டு எங்கும் செல்லாதே. மீன் பிடிப்பதற்கு பையன்கள் வருவார்கள். தூண்டிலில் புழுவை போடுவார்கள். நீ இரைதானே என்று புழுவை கடித்தால் உன்னை பிடித்துச் சென்றுவிடுவார்கள்,” என்று எச்சரித்தது.
கோல்டா, “சரி… சரி… நான் பார்த்துக்கொள்கிறேன்,” என்றது.
சில நாட்களில் அது தாய் கூறியதை மறந்துபோனது. வழக்கம்போல் தாயை விட்டு பிரிந்து தூரமாக நீந்திச் சென்றபோது, தண்ணீருக்குள் புழு ஒன்று தொங்குவதை கோல்டா பார்த்தது.
அந்தப் புழு அசையாமல் ஒரே இடத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. கோல்டா சிறிது நேரம் காத்திருந்து கவனித்தது. ஆனாலும் புழு அசையவில்லை.
புழுவை நோக்கி நீந்திச் சென்ற கோல்டா மீன் குஞ்சு, அதை கடித்தது.
திடீரென கோல்டா அப்படியே தண்ணீருக்குள்ளிருந்து மேலே சென்றது. அதன் வாயில் பயங்கர வலி ஏற்பட்டது. ஆம், கோல்டா தூண்டிலில் மாட்டிக்கொண்டது.
நல்லவேளை கோல்டாவின் வாய் கிழியவில்லை. அதற்குள் அதை ஒரு பையன் பிடித்தான்.
“டேய், கோல்டன் கலர் ஃபிஷ்டா,” என்று கூறி தன் நண்பர்களிடம் காட்டினான்.
அதை பாட்டிலில் இருந்த தண்ணீருக்குள் போட்டு வீட்டுக்குக் கொண்டு சென்றான்.
கோல்டா மீன் குஞ்சை வீட்டிலிருந்த மீன் தொட்டிக்குள் விட்டான்.
குளத்தில் எவ்வளவோ தூரம் நீந்தி சென்று விளையாடிய கோல்டா மீன் குஞ்சு, இந்த சிறிய கண்ணாடி தொட்டிக்குள் நீந்த வேண்டியதாயிற்று. அம்மாவின் பேச்சை கேட்டு கீழ்ப்படிந்திருந்தால் குளத்தில் சந்தோஷமாக இருந்திருக்கலாமே என்று எண்ணி வருந்தியது கோல்டா மீன் குஞ்சு.
நீதி: பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.