வாழ்வியல்: பாரம் சுமக்கிறவன்

வாழ்வியல்: "கடன் பாரம் தாங்க முடியலை… மனசே சரியில்லை…. இங்கே வந்து உட்கார்ந்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கிறமாதிரி தோணுது…" தயக்கத்துடன் சொன்னார்.
Spread the love

வாழ்வியல்: மதியானந்தாவின் ஆசிரமத்திற்கு நான்கு நாள்களாக ஒருவர் வந்துகொண்டிருந்தார்.

வருவதும் தொலைவில் உட்கார்ந்து மதியானந்தாவை பார்த்துக்கொண்டே இருப்பதும், சிறிது நேரம் கழித்துச் செல்வதுமாக இருந்தார்.

D Bros Media

ஐந்தாவது நாளும் வந்தார். மதியானந்தா தம் சீடனை அனுப்பி அவரை அருகே அழைத்தார்.

“தினமும் வர்றீங்க… ஒண்ணும் சொல்லாம போயிடுறீங்க… என்ன வேணும்?” என்று கேட்டார்.

“தொழில் ரொம்ப நஷ்டமாயிடுச்சு சாமி…” – வந்தவர் கண் கலங்கினார்.

“கடன் பாரம் தாங்க முடியலை… மனசே சரியில்லை…. இங்கே வந்து உட்கார்ந்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கிறமாதிரி தோணுது…” தயக்கத்துடன் சொன்னார்.

மதியானந்தா, அவரது தோளின்மேல் கைபோட்டு அணைத்துக் கொண்டு, அவரை ஆசிரமத்தின் வாயிலுக்கு அழைத்துச் சென்றார்.

ஆசிரமத்திற்கு வெளியே இருந்த சாலையில் வண்டிகள், மனிதர்கள் செல்வதும் வருவதுமாய் இருந்தனர்.

தொலைவில் வந்துகொண்டிருந்த ஒருவரை சுட்டிக்காட்டினார் மதியானந்தா.

“அவர் என்ன செய்கிறார்?” என்று கேட்டார்.

“சாமி, நாளைக்கு திங்கள்கிழமை. பக்கத்து ஊரில் சந்தை. அவர் சந்தையில் விற்பதற்கு மூடையில் பொருள்களை கொண்டு செல்கிறார்,” என்றார் வந்திருந்தவர்.

“மிகவும் சரியாக கணித்துவிட்டீர்கள்…” என்று மதியானந்தா கூறினார்.

“அநேகமாக அது தேங்காயாக இருக்கும். பாரமும் ஜாஸ்தி,” என்றார் அவர்.

“அதிக பாரம்… பாவம்! ஒரே ஆளாக தூக்கிக்கொண்டு போகிறார்,” மதியானந்தா, சொல்லிக்கொண்டிருந்தபோதே, சாலையில் வந்துகொண்டிருந்த அந்த நபர், அருகிலிருந்த குளத்தின் கரையில் மூடையை இறக்கி வைத்தார். குளத்தில் இறங்கி முகம், கை, கால்களை கழுவினார். சற்று நீரை கோரியெடுத்து பருகினார். குளத்தின் அருகிலிருந்த மரத்தின் நிழலில் உட்கார்ந்தார்.

“ரொம்பவும் களைச்சுப் போயிருக்கார்,” என்றார் ஆசிரமத்துக்கு வந்தவர்.

“பாரம் ஜாஸ்தி,” என்றார் மதியானந்தா.

சற்று நேரத்தில், அந்த மனிதர் எழுந்து மீண்டும் மூடையை தலையின்மேல் வைத்துக்கொண்டு நடந்துசென்றார்.

“பாரம்தான்…” என்றார் வந்திருந்தவர்.

“ஆமாம்… ஆனால், அவர் பாரமாக இருக்கிறது என்று தயங்கியிருந்தால்… சுமந்து செல்ல ஏதாவது வண்டி கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தால்…?” கேட்டார் மதியானந்தா.

“அப்படியே உட்கார்ந்திருக்கவேண்டியதுதான்…” என்றார் கடன் இருப்பவர்.

மதியானந்தா புன்னகைத்தார்.

“ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு பாரம் இருக்கும்… அதை அவனே சுமக்கவேண்டிய கட்டாயமும் இருக்கும்… இதோ, கஷ்டப்பட்டு சுமந்துபோகிறார்… சந்தையில் தேங்காயை விற்றதும் கை நிறைய பணம் கிடைக்கும்…. வரும்போது சுமை இருக்காது… பணம்தான் இருக்கும்…” என்றார்.

ஆசிரமத்திற்கு வந்தவர் யோசித்தார்.

“கடன் இருக்கிறது என்று நீங்கள் அதையே நினைத்துக்கொண்டிருந்தால் அது தீராது. இவர் பாரத்தை இறக்கி வைத்து, தண்ணீர் குடித்து இளைப்பாறி சென்றதுபோல, நீங்களும் கடன் பாரத்தை கொஞ்சம் மனதைவிட்டு இறக்கி வைத்துவிட்டு, வேலைகளை செய்யுங்கள். வேலை செய்தால்தான் பணமீட்ட முடியும்… கடனை அடைக்க முடியும். மனதில் கடனை மட்டும் சுமந்து திரிந்தால் கவலைதான் மிஞ்சும்,” என்றார் மதியானந்தா.

“சரி சாமி… நான் என்ன செய்யட்டும்…?” அவர் கேட்டார்.

“கடனை பற்றி பெரிதாக கவலைப்படாமல் உங்களுக்கு தெரிந்த தொழிலை செய்யுங்கள்… கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்துவிடலாம்…” என்றார்.

சாமியை கும்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றார் அவர்.

இதையும் வாசியுங்கள்: வாழ்வியல்: கவலை பெருங்கடல்

கதைகளை உடனுக்குடன் வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்.

High Lights Studio