விவாகரத்து: டைவர்ஸ் வேண்டாமே… இவற்றை ட்ரை பண்ணி பாருங்க

விவாகரத்து: பெரும்பாலும் யாரும் தன்னுடைய வாழ்க்கையை தானே அழித்துக்கொள்ள விரும்புவதில்லை
Spread the love

விவாகரத்து: ‘டைவர்ஸ்’ என்ற ஆங்கில வார்த்தை இந்தியாவில் மாதந்தோறும் சராசரியாக 49 ஆயிரம் முறை தேடப்பட்டுள்ளது. விவாகரத்துக்கான ஆவணங்கள் ‘டைவர்ஸ் பேப்பர்ஸ்’ என்ற வார்த்தை சராசரியாக 17 ஆயிரம் முறை தேடப்பட்டுள்ளது. இணைவோம்; பிரிவோம் என்ற அவசரகதியில் இல்லறத்தில் தம்பதியராய் புகுந்து தனியராய் வெளியேறும் நிலை உள்ளது.

திருமணம் என்பதே தன்னை முற்றிலும் அறிந்த, ஓரளவு சமுதாயத்தையும் அறிந்த வயதில் நடப்பது அல்லது நடத்தி வைக்கப்படுவது. பெரும்பாலும் யாரும் தன்னுடைய வாழ்க்கையை தானே அழித்துக்கொள்ள விரும்புவதில்லை. இல்லறத்தில் கசப்பினை வளரவிடாமல் இருப்பதே, பிரிவு என்னும் வருத்தத்தை எட்டாமல் இருக்கும் வழி. உங்களுக்கும் உங்கள் கணவர் அல்லது மனைவிக்கு இடையே கசப்பு இருப்பதாக உணர்கிறீர்களா? வழக்கறிஞரின் அலுவலக வாசலில் நிற்கிறீர்களா? கீழ்க்காணும் நடைமுறை வழிகளை ஒருமுறை நம்பிக்கையுடன் முயற்சித்துப் பாருங்கள்.

D Bros Media

மனம் திறந்து உரையாடுங்கள்

இல்லறம் சிறக்க முக்கியமானது தம்பதியருக்கிடையேயான நல்ல உரையாடல் ஆகும். கணவன், மனைவியாகிய உங்களுக்குள் பிரச்னை இருக்கிறது என்று உணர்ந்தால், இருவரும் தங்கள் உணர்வுகளை, வருத்தங்களை, விருப்பங்களை திறந்த மனதுடன் வெளிப்படுத்தக்கூடிய ஓர் இடத்தை தெரிவு செய்து, நீங்கள் இருவரும் உரையாடுங்கள். இதுபோன்ற உரையாடல்களில் முன் முடிவுகள் இல்லாமல் ஈடுபடுவது அவசியம்.
ஒருவர் பேசும்போது மற்றவர் இடைமறித்து பேசுவதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் துணை முழுமையாக தன் மனவருத்தங்களை, ஆசைகளை வெளிப்படுத்த இடம் கொடுங்கள்.
கணவர் பேசும்போது மனைவியும், மனைவி பேசும்போது கணவரும் கவனமாக கேளுங்கள். அசட்டையாக இருக்கவேண்டாம்.
ஒருவர்பேரில் ஒருவர் பழி சுமத்துவதை தவிர்த்து, கணவர் / மனைவி தன் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள நேரம் கொடுங்கள்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் தம்பதியர் இவ்வாறு உரையாடினால் பெரும்பாலான பிரச்னைகளை தவிர்த்துவிடலாம்.

சேர்ந்து நேரம் கழித்திடுங்கள்

இன்று வீட்டுக்கு செலவழிக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. அவரவர் வேலை அல்லது தொழிலே நேரத்தை முழுமையாக எடுத்துக்கொள்கிறது. எவ்வளவு பரபரப்பான வேலையை நீங்கள் செய்தாலும், உங்கள் நிறுவனத்தில் எவ்வளவு முக்கிய பொறுப்பில் இருந்தாலும் உங்கள் கணவர் / மனைவியுடன் செலவழிக்க நேரம் ஒதுக்குங்கள். உண்மையான அக்கறையோடு நேரத்தை கண்டுபிடியுங்கள். இருவரும் ஒன்றாய் நேரம் செலவழிப்பது ஒருவர்பேரில் ஒருவருக்கு தொடக்கத்தில் இருந்த ஈர்ப்பு மறுபடியும் தளிர்ப்பதற்கு வழி செய்யும்.
வழக்கமான வேலைநாளின் இரவுப்பொழுதாகட்டும், வார இறுதியில் வெளியே செல்வதாகட்டும்; இருவரும் இணைந்து இரவு உணவு சமைப்பதாகட்டும் எப்படியாவது இருவரும் சேர்ந்து பொழுதை கழிக்க முன்னுரிமை அளித்திடுங்கள்.

தனிப்பட்ட பிரச்னையை தீர்க்க உதவுங்கள்

பெரும்பாலும் உங்கள் துணை வெளியே சொல்ல விரும்பாத அல்லாத முடியாத மன அழுத்தத்தின் காரணமாக உங்களுடனான உறவில் உரசல் ஏற்பட்டிருக்கலாம். அனைவருமே படித்து, வேலைக்குச் செல்கிற இந்தக் காலத்தில் இதுபோன்ற பணியிட பிரச்னைகளை அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.
ஒருவேளை உங்கள் கணவருக்கு அல்லது மனைவிக்கு அலுவலகத்தில் ஏதேனும் பிரச்னை இருந்து அதன் காரணமாக அவர் வீட்டில் கோபத்தை அல்லது சலிப்பை காட்டுவதால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறதா என்பதை சற்று நிதானித்துப் பாருங்கள். அவ்வாறு பிரச்னை இருக்க வாய்ப்பிருப்பின், அதிலிருந்து விடுபட அல்லது அதை மேற்கொள்ள நீங்கள் உங்கள் கணவர் / மனைவிக்கு உதவலாம். இதனால் அவர்கள் நிம்மதி அடைவார்கள்; உங்கள் இல்லறம் பிளவிலிருந்து தப்பிக்கும்.
பணியிடம் தவிர்த்த மற்ற குடும்ப அல்லது நட்பு வட்ட பிரச்னைகளையும் இவ்வாறே நீங்கள் அணுகலாம்.

மன்னித்து மகிழுங்கள்

உண்மையில் உங்கள் மனம் வருந்தத்தக்க அல்லது மிகவும் காயமுறத்தக்க விஷயத்தை உங்கள் வாழ்க்கை துணை செய்திருக்கலாம். சில நேரங்களில் சில தவறுகள் தவிர்க்க முடியாமல் நடந்துவிடும். நம் பண்பாட்டில் திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். செய்த தவற்றுக்காக உங்கள் கணவர் / மனைவி உண்மையில் மனம் வருந்துவார்களென்றால் அதை மன்னித்துவிடலாம்.
பண விஷயமாகவே, குடும்ப விஷயமாகவோ, பிள்ளைகள் சார்ந்த முடிவெடுத்தலோ எதுவாக இருந்தாலும் கணவர் / மனைவி செய்துவிட்ட தவற்றை மன்னித்து மறந்துவிட்டால் மறுபடியும் உங்கள் இல்லறம் இனிக்க வாய்ப்பு அதிகம்.

அணுக்கமும் அன்பும்

இதையும் வாசியுங்கள்: வாழ்வியல்: காதலொருவனும் கஸ்டமைசேஷனும்

தம்பதியர் என்றாலே கூடல் அங்கே முக்கிய இடம் வகிக்கும். முடிந்த அளவு உணர்வுரீதியாகவும் உடலளவிலும் உங்கள் கணவர் /மனைவியுடன் நெருக்கமாக இருக்க முயற்சி செய்யுங்கள். தம்பதியருக்கிடையே நல்ல புரிந்துணர்வை கொடுப்பது கூடல்தான். ஆகவே, அவர்கள் மீது உங்களுக்கு இருக்கும் ஈர்ப்பை உணர்த்துங்கள். பெரும்பாலும் இந்த அணுக்கம் எல்லா காயங்களுக்கும் மருந்திட்டு குணப்படுத்திவிடும்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பிரிந்து செல்ல திருமணம் விளையாட்டு விஷயமல்ல. தம்பதியர் இருவருமே அதன் முக்கியத்துவத்தை உணரவேண்டும். தனிப்பட்ட விருப்பங்கள் முக்கியம்தான். ஆனால், அதை மட்டுமே முன்னிறுத்தினால் திருமணம் அர்த்தமற்றதாகிவிடும்.

உங்கள் இல்லறம் மீண்டும் சிறக்க வாழ்த்துகள்.

கட்டுரைகளை உடனுக்குடன் வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்

High Lights Studio