சின்ன விஷயங்களே பெரியவையாகி திருமண வாழ்க்கையை கசந்துபோகச் செய்கின்றன. பின்னர் நிதானித்துப் பார்த்தால், “இதற்காகவா பிரிந்தோம்?” என்று வெட்கப்படுமளவுக்கு பிரச்னை சிறியதாக இருக்கும். நம் நாட்டில் திருமண வாழ்க்கை குடும்பம் என்ற அடித்தளத்தில் கட்டப்படுகிறது. அதில் கசப்பு ஏற்படாமல் தவிர்க்க சில ஆலோசனைகள்…
பக்க சார்பு:
மாமியார் – மருமகள் பிரச்னை என்பது அனைத்து குடும்பங்களிலும் இருப்பது. மாமியாருடனான பிரச்னையை கணவனிடம் கூறலாம். ஆனால், ஒரு பக்க சார்பான நிலையை கணவன் எடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.
தன் அம்மாவுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கணவன் நிச்சயமாகவே ஒரு சார்பாக நிற்பதை தவிர்க்கவேண்டும்.
புதிதாக வரும் மனைவி, குடும்பத்திற்கு அனுசரித்து செல்லவேண்டும் என்று புகுந்த வீட்டார் விரும்புவதுபோல, வந்த மருமகளை அனுசரிக்க மாமியாரும் கணவன் வீட்டாரும் ஆயத்தமாக இருக்கவேண்டும்.
புகுந்த வீட்டாரின் எதிர்பார்ப்பை மருமகளும், மருமகளின் எதிர்பார்ப்பை புகுந்த வீட்டாரும் சரியாக புரிந்துகொள்ளவேண்டும்.
பிடிக்காத விஷயங்கள்:
கணவன் சிறுவயதிலிருந்தே பழகிய விஷயங்கள் சில மனைவிக்குப் பிடிக்காதவையாக இருக்கலாம். உதாரணமாக, எடுத்த பொருளை உரிய இடத்தில் வைக்காதது, வெளியே இருந்து வீட்டுக்குள் வந்ததும் கை, கால்களை கழுவாதது போன்ற விஷயங்களை மனைவியால் சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால், காலங்காலமாக செய்தவற்றை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது என்பதை உணர்ந்து, பொறுமையாக இருக்கவேண்டும். தன் எதிர்பார்ப்பை கணவனிடம் கூறி, அதற்காக காரணங்களை விளக்கலாம். காலப்போக்கில் கணவன் தன் வழக்கங்களை மாற்றும் வாய்ப்பு உண்டு.
அதேபோன்று தனக்கு ஒத்து வராத பழக்கங்கள் மனைவிக்கு இருந்தால், மனைவி அதை மாற்றிக்கொள்ள கணவன் தருணம் அளிக்கவேண்டும்.
வேலைப்பளு:
இருவரும் வேலைக்குச் செல்வது இக்காலத்தில் தவிர்க்க இயலாத ஒன்று. இருவரும் பணிக்குச் சென்று சோர்வோடு வீடு திரும்பும்போது, மனைவி மாத்திரமே வீட்டுவேலைகளைச் செய்யவேண்டி வருவது அநேக குடும்பங்களில் கசப்பு உண்டாக காரணமாகிறது.
வீட்டிலிருந்து இருவரின் அலுவலகம் அமைந்திருக்கும் தூரம், பயண நேரம், பணியின் இயல்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தம்பதியர் இருவரும் தங்களுக்குள் ஆரோக்கியமாக ஆலோசித்து வீட்டு வேலைகளை செய்யலாம். வேலைகளை பிரித்துக்கொண்டாலும், அவற்றை உடனே அப்படியே பின்பற்றுவது கடினம். ஆகவே, வேலைகள் பழகும் வரை ஒருவருக்கு ஒருவர் உதவுவது, உடல்நிலை சரியில்லாதபோது கூடுதல் வேலைகளை செய்வது பிணக்கு வராமல் தடுக்கும்.
பண விஷயம்:
தனித்தனியாக இருந்தபோது பணத்தை கையாண்டதுபோல் திருமணமான பிறகு கையாள இயலாது. அதுவும் குழந்தைகள் பிறந்த பிறகு செலவுகள் அதிகமாகும். ஆகவே, அதற்கேற்ப திட்டமிட்டு பொருளாதாரத்தை கையாள்வது அவசியம். அவசர தேவைகளுக்கென்று ஒரு வங்கி கணக்கை திறந்து அதில் பணத்தை போட்டு வரலாம். வேறு செலவுகளுக்கு அதிலிருந்து பணம் எடுக்காமல் பாதுகாப்பாக வைத்திருந்தால், அவசர தேவைகள் ஏற்படும்போது திகைத்துப்போகாமல் இருக்கலாம். பணத்தேவையினால் கசப்பு ஏற்படாமல் இருக்கும்.
பழைய விஷயங்கள்:
தம்பதியருக்குள் வாக்குவாதம் எழுவதை இயன்ற அளவு தவிர்ப்பது நல்லது. ஒருவர் கோபமாக, பதற்றமாக இருக்கும்போது ஒரு விஷயத்தை விவாதிப்பதை இன்னொருவர் எச்சரிக்கையாக தவிர்க்கலாம். ஒருவேளை, வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டால், நிதானம் இழந்து பழைய விஷயங்களை பேசுவதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். ஏற்கனவே நடந்து முடிந்து, பேசி முடித்து, முடிவு எடுக்கப்பட்ட பழைய கசப்பான விஷயங்களை பேசி, நினைவுகளை கிளறிவிடுதல் சூழ்நிலையை சிக்கலாக்கிவிடும். ஆகவே, பழைய கசப்புகளை ஒருபோதும் நினைவுப்படுத்தக்கூடாது.
கட்டுரைகளை உடனுக்குடன் வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்