வாழ்வியல்: இது கிரிக்கெட்டை மட்டும் பற்றிய பதிவல்ல. ஆகவே, அனைவரும் வாசியுங்கள்!
சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது என்று கூறுவார்கள். அதேபோன்ற வீரதீர பராக்கிரம செயலை நிகழ்த்தியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி.
ஒரு காலத்தில் உலக கிரிக்கெட்டில் கோலோச்சியது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைகளை முதல் இரண்டு தடவையும் வென்றது வெஸ்ட் இண்டீஸ். அதன் வேகப்பந்து வீச்சாளர்களை எந்த அணியினராலும் சமாளிக்க முடியாது என்ற நிலையும் இருந்தது.
பின்னர் புகழின் உச்சியிலிருந்து சரிந்தது அந்த அணி. பொருளாதார சிக்கல் உள்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் டெஸ்ட் விளையாடும் தரத்தை கூட இழக்கக்கூடிய அவலநிலையில் இருந்தது.
அந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடர் ஆடச் சென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. யாருக்கும் பெரிய நம்பிக்கை இல்லாத நிலைதான்! அதுவும் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கும் போட்டி.
முதல் போட்டியை ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி, 2024 ஜனவரி 25 முதல் 29 வரை நடைபெற இருந்தது. அந்தப் போட்டி காபா மைதானத்தில் நடைபெற்றது. அது முக்கியமான மைதானம். அதிலும் வெற்றி பெறும் முனைப்பில் டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணிக்கு எமனாக மாறினார் வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதிய பந்துவீச்சாளர் ஷாமர் ஜோசப்.
கயானா பகுதியில் பராகரா என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜோசப். 2018ம் ஆண்டு வரைக்கும் அந்த ஊருக்கு இணைய இணைப்பே கிடையாதாம். பழங்களையும் பின்னர் பிளாஸ்டிக்கை உருக்கி செய்த பந்தை கொண்டும்தான் அவர் விளையாடி பயிற்சி எடுத்துள்ளார்.
வேலைதேடி நியூ ஆம்ஸ்டர்டாம் என்ற துறைமுக நகருக்கு வந்த அவர், கட்டுமான தொழிலாளியாகவும், 12 மணி நேரம் உழைக்கும் செக்யூரிட்டியாகவும் வேலை செய்துள்ளார். ஜோசப்பின் கிரிக்கெட் தாகத்தை அறிந்த அவரது வருங்கால மனைவி டிரிஷ், வேலையை விட்டுவிட்டு பயிற்சிக்கு செல்வதற்கு உதவியுள்ளார்.
அங்குதான் மாறியுள்ளது ஷாமர் ஜோசப்பின் வாழ்க்கையும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் விதியும்…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 68 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற காரணமானார்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியுள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
இந்த ஆச்சரியமான, நம்ப இயலாத வெற்றியைக் கண்டு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரரை எக்ஸ் ஃபேக்டர் என்று அழைப்பர். அவ்வாறு செயல்பட்டு, இழந்த பெருமையை ஈட்டித் தந்த ஷாமர் ஜோசப்பை கொண்டாடுகின்றனர் வெஸ்ட் இண்டீஸ் மக்கள்.
வாழ்ந்து கெட்ட குடும்பம் போன்ற கதைதான்! அந்தக் குடும்பத்தின் பெருமையை திரும்ப கட்டியெழுப்ப ஒருவன் பிறந்த கதை போன்றதுதான் ஷாமர் ஜோசப்பின் வருகையும்…
உங்கள் குடும்பத்திற்கு அப்படி எக்ஸ் ஃபேக்டராக விளங்கி இழந்த பெருமையை மீட்டது யார் என்று எண்ணிப் பாருங்கள்.. அதை கமெண்டில் பதிவு செய்யுங்கள்…
உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் ஷாமர் ஜோசப்பாக, எக்ஸ் ஃபேக்டராக இருக்கலாம்…
இதுபோன்ற சிந்தனைகளை உடனுக்குடன் வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்.