வாழ்வியல்: மகாவுக்கு வயது 35. ஐ.டி. துறையில் வேலை. கார்த்திக்கை திருமண தகவல் இணையதளம் ஒன்றில் கண்டுபிடித்தாள். இருவரும் வேலை பார்ப்பதால், குடும்பம் நடத்த எந்த கஷ்டமும் இருக்காது என்று திருமணம் செய்து கொண்டனர். கார்த்திக்கின் பெற்றோரும் உடன் இருந்தனர். குடும்ப செலவுகளுக்கு மகாவும் பணம் கொடுத்தாள்.
கார்த்திக் அலுவலகத்திலிருந்து வந்ததும் டி.வி. முன் உட்கார்ந்து கொள்வான். மகா, வேலையிலிருந்து வந்து அனைவருக்கும் சமைக்கவேண்டும். வேலையின் களைப்பும், மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு திட்டமிட வேண்டிய கட்டாயமும் அவளுக்கு நெருக்கடியை அளித்தன.
இருவரும் தனிக்குடித்தனம் சென்றால் ஒருவேளை அழுத்தம் குறையுமோ? என்று கருதி, அதைப் பற்றி கார்த்திக்கிடம் பேசினாள் மகா. அவ்வளவுதான்! பெரும் பூகம்பமே வெடித்துவிட்டது.
மகா, குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாள். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
எல்லா திருமண வைபவங்களும் ஒரேவிதமாக நடக்கலாம். ஒன்றுபோலவே மேடையை அலங்கரிக்கலாம்; புதிய பாணியிலான ஆடைகளை அணிந்துகொள்ளலாம்; ஒரே மெனு கொண்ட சாப்பாடு பரிமாறலாம்; தாம்பூல பை ஒரேவிதமாக கொடுக்கலாம். ஆனால், ஒவ்வொரு தம்பதியும், அவர்களுக்கான எதிர்பார்ப்பும் முற்றிலும் வேறுபட்டவை.
முன்பு, வரதட்சணை, சொத்து பிரச்னை, குடும்பங்களிடையேயான விவாதம் ஆகியவை திருமண முறிவுக்கு காரணமாக இருந்தன. தற்போது, வீட்டு வேலைகளை யார் செய்வது என்பதே மனவிலக்கத்தை உருவாக்கிவிடுகிறது என்று இல்லற ஆலோசகர் ஒருவர் கூறுகிறார்.
முன்பு தாங்கள் இணைந்து வாழ முடியுமா என்பதை கண்டுகொள்ளவே மனநல ஆலோசனைக்கு வந்தனர். தற்போதோ தாங்கள் எடுத்துள்ள முடிவு சரியானதே என்று குடும்பத்தினருக்கு எடுத்துச் சொல்வதற்கே இளம் தம்பதியர் மனநல ஆலோசகரிடம் வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடம், இரண்டு வருடங்களுக்குள் வரும் தம்பதியரே அதிகம் என்றும் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
எப்படி சமுதாயத்தில் இருந்தே அரசியல் தலைவர்களும், மருத்துவர்களும், வழக்குரைஞர்களும், அரசு அதிகாரிகளும் வருகின்றார்களோ அதேபோன்றுதான் சமுதாயத்தில் இருந்தே கணவனும் மனைவியும் இணைகின்றனர். ஒவ்வொரு ஆணுக்குள்ளும், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அவரவர் குடும்பமும், அதுவரை வாழ்ந்த சமுதாயமும் விதைத்த கருத்துகள், விருப்பு வெறுப்புகள் இருக்கும். ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியுமாக இணையும்போது அவரவர் சார்ந்த சமுதாயத்தின் பிரதிநிதியாக செயல்பட ஆரம்பிக்கின்றனர்; பிரச்னையும் வருகிறது.
இதையும் வாசியுங்கள்:வாழ்வியல்: வாழ்க்கை சூத்திரம்
கஸ்டமைசேஷன்
இது நவீன தொழில்நுட்பத்தின் காலகட்டம். ஸ்மார்ட்போன்கள் முதல் எத்தனையோ தொழில்நுட்ப சாதனங்களை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம்.
நம்முடைய பயன்பாட்டை நன்கு புரிந்து அதற்கேற்ப மென்பொருளையோ, சாதனத்தையோ நாம் வாங்குகிறோம். வாங்கியதை நாம் அப்படியே பயன்படுத்துவதில்லை. அந்த சாதனத்தில் நம் தேவைக்கேற்றபடி செயல்பாட்டு வடிவமைப்பை மாற்றுகிறோம். அதாவது அந்த மென்பொருளில், சாதனத்தில் இருக்கும் வசதிகளை, செயல்பாடுகளை நம் தேவைக்கேற்றபடி மட்டுமல்ல, விருப்பத்திற்கேற்பவும் மாற்றிக்கொள்ளுகிறோம்.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்து எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் திறன்மிக்க தலைமுறை, தங்கள் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டவரின் குணங்கள், இயல்பு, இல்லறத்திற்கு எப்படி பயன்படும் என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். அவரது இயல்பான விருப்பங்களை, நாட்டங்களை இல்லறத்திற்கு உகந்தவகையில் எப்படி பயன்படுத்தலாம் என்று சற்று நிதானித்து யோசித்தாலே மனவிலக்கம் ஏற்படுவதை பெரும்பாலும் தவிர்த்துவிட முடியும்.
குறிப்பாக, வாழ்க்கைத் துணையாக வந்தவர் நேரம் தவறாத குணம் கொண்டவராக இருந்தால், குடும்பத்தில் நேரம் சார்ந்த விஷயங்களை கையாள அவரிடம் ஒப்படைக்கலாம். பணத்தை திட்டமிட்டு செலவழிக்கும் கொண்டவராக இருப்பின் பண விஷயங்களை அவர் கையில் கொடுத்துவிடலாம். எதையும் முறையாக திட்டமிடக்கூடியவராக இருந்தால், உறவினர் சார்ந்த விசேஷங்கள் போன்ற குடும்பம் சார்ந்த பயணங்களை ஒழுங்குபடுத்த அவரை பொறுப்பாக்கலாம். இயல்பான விருப்பம் கொண்ட வேலைகளை செய்வதில் அவர்கள் ஆர்வமாக இருப்பார்களே தவிர, அதை சுமையாக கருத மாட்டார்கள்.
டீம் ஒர்க்
‘டீம் ஒர்க்’ என்பது அலுவலகத்தில் அடிக்கடி கேட்கும் ஒரு வார்த்தை. ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட வேலை இருக்கும். அந்த வேலையை ஆரம்பிக்கும் முன்னர், அதற்கு அடிப்படை தேவைகள் எவை? எவை நமக்கு ஏற்கனவே இருக்கின்றன? எவற்றை புதிதாக சேர்க்கவேண்டும்? வேலையை தொடங்கிய பின்னர் வரக்கூடிய தடைகள் எவை என்றெல்லாம் திட்டமிட்டே புதிய வேலையை தொடங்குவோம். ஒருவேளை, குழுவில் ஒருவரால் திட்டமிட்ட அல்லது ஒதுக்கப்பட்ட வேலையை செய்ய முடியவில்லையென்றால், அந்த வேலையை மற்றவர்கள் பகிர்ந்து முடிப்பதும் அந்தக் குழுவின் பொறுப்பாகும்.
குடும்பத்தையும் இன்றைய காலகட்டத்தில் நாம் அப்படியே நோக்கலாம். ‘டீம் லீடர்’ என்ற பதம் குடும்பத்திற்கு பொருந்தாது என்று நினைத்தால், கணவனும் மனைவியும் இணைந்தே தலைமையேற்கலாம் அல்லது தங்களில் ஒருவரை மற்றவர், குடும்ப செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் அமர்த்திவிடலாம். பிள்ளைகளுக்கு அவர்கள் திறனுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற பொறுப்புகளை கொடுக்கலாம்.
சாப்பாட்டு போன்ற சிறிய விஷயமாகட்டும், உறவுக்குள் பிரச்னை என்ற பெரிய விஷயமாகட்டும், கணவன் – மனைவி இருவருமே தங்கள் டீம் தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் இணைந்து செயல்பட்டால், குடும்பத்தில் பிளவுக்கு இடமிருக்காது.
தமிழ்நாட்டில் குடும்ப நீதிமன்றங்களில் 2023 ஜூலை மாதம் 2,239 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இன்னும் 31,720 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 3,87,349 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நம் குடும்பம் இப்படி நீதிமன்றத்தில்போய் நிற்கக்கூடாது என்று முடிவெடுப்போம். நல்லதே நடக்கும்!
இதுபோன்ற கட்டுரைகளை உடனுக்குடன் வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்.