குலசேகரப்பட்டினம் நூலகத்திற்கு கேடயம்: நூலகர் மாதவனுக்கு பாராட்டு

ஆண்டுதோறும் மாநில அளவில் அதிக அளவு உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் சேர்த்த நூலகங்களுக்கு கேடயம் வழங்கப்படும். இந்த ஆண்டு குலசேகரப்பட்டினம் நூலகம் கேடயம் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
Spread the love

மாநில அளவில் சிறப்பிடம் பெற்றதற்கான கேடயம் 2023 நவம்பர் 20ம் தேதி, குலசேகரப்பட்டினம் கிளை நூலகத்திற்கு பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்க இருக்கிறார். அதை நூலகர் மாதவன் பெற்றுக்கொள்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் கிளை நூலகம் இயங்கி வருகிறது. இந்நூலகத்தின் நூலகராக பரமன்குறிச்சியை சேர்ந்த மாதவன் கடந்த ஓராண்டாக பணியாற்றி வருகிறார். ஆண்டுதோறும் மாநில அளவில் அதிக அளவு உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் சேர்த்த நூலகங்களுக்கு கேடயம் வழங்கப்படும். இந்த ஆண்டு குலசேகரப்பட்டினம் நூலகம் கேடயம் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

D Bros Media

இந்திய நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் எஸ்.ஆர். ரங்கநாதன், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த வேதாந்தபுரத்தில் பிறந்தவர். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற பிறகு, ஆசிரியர் பயிற்சியும் பெற்று கணிதம் மற்றும் இயற்பியல் விரிவுரையாளராக பணியாற்றிய அவர், சென்னைப் பல்கலைக் கழகத்தில் நூலகராக பணியில் சேர்ந்தார். லண்டனிலுள்ள டபிள்யூ.சி.பி. சேயர்சிடம் நூலக அறிவியலின் அடிப்படை கோட்பாடுகளை பயின்றார். இவர் இந்திய நூலக சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்தார். நூலக அறிவியல் பட்டய படிப்பை அறிமுகம் செய்தவர் எஸ்.ஆர்.ரங்கநாதன் ஆவார். சிறப்பாக பணியாற்றும் நூலகர்களுக்கு ஆண்டுதோறும் நல் நூலகர் என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.

நூல்கள் பயன்படுவதற்கே.
ஒவ்வொரு வாசகருக்கும் ஒரு நூல்.
ஒவ்வொரு நூலுக்கும் ஒரு வாசகர்.
காலம் கருதுக.
நூலகம் வளரும் தன்மை உடையது.
என்ற நூலகத்திற்கான ஐந்து விதிகளை அவர் வகுத்தார். எஸ்.ஆர்.ரங்கநாதனை நினைவுகூரும்வண்ணம், சீர்காழியில் 2023 நவம்பர் 20ம் தேதி, திங்களன்று நடைபெறும் விழாவில் சிறந்த நூலகங்கள் மற்றும் நூலகர்களுக்கு கேடயம் மற்றும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

குலசேகரப்பட்டினம் நூலகத்திற்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு பரமன்குறிச்சி வி.வி.பி. கல்வி அறக்கட்டளை தலைவரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும், திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் செயலாளருமான வி.பி.ராமநாதன் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த தொழிலதிபர் வி.எஸ். நடராஜன் ஆகியோர் உதவியுள்ளதால், ஊர்ப் பொதுமக்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தங்கள் கிளை நூலகத்தின் சிறப்பான செயல்பாட்டுக்காக நூலகர் மாதவனை பாராட்டியுள்ளனர்.

இதையும் வாசியுங்கள்: வாழ்வியல்: தர்மம் தழைக்குமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்

High Lights Studio