இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சியினர் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்வது குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
பாரத் ஜோடா நியாய யாத்திரை என்னும் பாரத ஒற்றுமை நியாய யாத்திரை செல்லும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, நாகலாந்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்து தர்மம் என்பது வாழ்க்கை முறை என்றும், தான் அதன் கொள்கையின்படி வாழ முயற்சிப்பதாகவும் கூறிய ராகுல் காந்தி, அதை நம்பாதவர்களே சட்டையில் அதை அணிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
டிசம்பர் 22ம் தேதி அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவை பாரதிய ஜனதாவும் ஆர்எஸ்எஸ்ஸூம் முழு அரசியல் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியானது, பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் இவற்றின் சித்தாந்தத்திற்கு எதிரான சிந்தாத்தத்தின் கூட்டணி என்றும், கூட்டணி தலைவர்களிடையே பரஸ்பர மரியாதை இருப்பதாகவும் அவர் கூறினார். தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை இன்னும் சில நாள்களில் இருக்கும் என்றும், பங்கீடு பெரிய அளவில் சிக்கலில்லாமல் நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். செய்தியாளர் சிறு சிறு பிரச்னைகளை எழுப்பி அவற்றை பெரிய பிரச்னை போல் காண்பிக்க முயல்வதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் தலைவர்கள் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை எனவும், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியினரும், காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களும் அந்த விழாவுக்குச் செல்லவேண்டுமென்று விரும்பினால் தாராளமாக செல்லலாம் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், தானும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்குச் செல்லபோவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் வாசியுங்கள்:சிறுகதை: ஊரில்லா உறவு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்.