சிறுகதை: திடீர் உறவுகள்

சிறுகதை: "சரி வீட்டுக்குள் தண்ணீர் பெருகுவதற்குள் எங்கேயாவது போவோம்" என்று எண்ணியவள், மாமியார் கமலத்தையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, தெருவுக்கு வந்தனர்.
Spread the love

சிறுகதை: கதவு இடுக்கின் வழியாக தண்ணீர் வர ஆரம்பித்தது.

நந்தினிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. காலையிலிருந்து மின்சாரம் இல்லை. ஊரே இருட்டாக இருந்தது.

D Bros Media

“பிள்ளைங்களை தூக்கிட்டு எங்கேயாவது போயிருவோம்,” என்றாள் நந்தினியின் மாமியார் கமலம்.

“எங்க போறது?” என்று கேட்டவளுக்கு ஒன்றுமே தோன்றவில்லை.

அந்தத் தெருவின் கடைசியில் அவர்கள் உறவுக்காரர் ஒருவர் புதிதாக வீடு கட்டியிருந்தார். மாடியோடு கட்டப்பட்ட வீடு. அங்கு போய் மாடியில் ஏறிவிட்டால் கொஞ்சம் பாதுகாப்பு என்ற எண்ணம் நந்தினிக்கு வந்தது.

வீட்டை விட்டு வெளியே வந்தால் தெருவில் எதுவுமே தெரியவில்லை. தண்ணீரின் இழுப்பு அதிகமாகிக்கொண்டிருந்தது.

இந்நாள் வரை எந்தக் கவனிப்பும் இல்லாமல் கிடந்த வாய்க்காலின் வரும் தண்ணீரா இது என்று வியந்துகொண்டாள் மனதுக்குள்.

யாருடைய மொபைல் போனும் வேலை செய்யவில்லை. தட்டுத்தடுமாறி தெருவின் கடைசிக்குப் போனாள். அந்த வீட்டின் ஜன்னல்கள் இறுக மூடப்பட்டிருந்தன. வீட்டின் வெளியே நின்று கூப்பிட்டுப் பார்த்தாள்.

“அக்கா… அக்கா…” – பலமுறை கூப்பிட்டும் பதிலில்லை.

ஆக்ரோஷமாக பெய்த மழை பிடித்திருந்த குடையை பொருட்படுத்தாமல் நந்தினியை நனைத்தது.

பிள்ளைகளை எங்காவது பாதுகாப்பாக விட்டுவிட்டால் போதும் என்ற தவிப்பு மனதுக்குள் எழுந்தது.

வேலைக்குப் போன கணவனைக் குறித்த கவலையும் எட்டிப்பார்த்தது.

இந்த ஊரில் இப்படி ஒரு நிலை வரும் என்று யாரும் கனவிலும் எண்ணியிருக்கமாட்டார்கள். மழை பொய்த்துப்போய் பல வருடம் ஆகியிருந்தது. குளம், வாய்க்கால் எல்லாம் வறண்டுபோய் கிடந்தன.

மழை இரண்டு நாள் அடித்துப் பெய்ததில், ஆற்றில் தண்ணீர் புரண்டது. குளங்கள் நிரம்பின; வாய்க்கால்களில் வந்த தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

நந்தினிக்கு கண்ணீர் மல்கியது.

“பிள்ளைகளை வச்சிகிட்டு என்ன செய்வேன்? இந்த மனுஷன் வேற வேலைக்கு போயிருக்காரே?” என்று மருகினாள்.

“சரி வீட்டுக்குள் தண்ணீர் பெருகுவதற்குள் எங்கேயாவது போவோம்” என்று எண்ணியவள், மாமியார் கமலத்தையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, ஆளுக்கொரு போர்வையையும் குடையையும் எடுத்துக்கொண்டு தெருவுக்கு வந்தனர். ஆம்! தெருவுக்கு வந்தனர்.

சின்னச்சாமி மாமா வீடு, ஆத்திக்கண் சித்தப்பா வீடு – எங்கும் யாரும் இல்லை. அனைவர் வீடுகளும் பூட்டியிருந்தன. எங்கோ இடம் தேடிப் போயிருக்கவேண்டும்.

பிள்ளைகளின் கழுத்தளவுக்கு தண்ணீர் உயர்ந்தது. கமலத்தை தண்ணீர் தள்ளியது.

“யம்மா… நடக்க ஏலலியே…” – தடுமாறினாள் அவள் மாமியார்.

தொலைவில் ஒரு வண்டியின் விளக்கு தெரிந்தது.

“யாராயிருக்கும்…?” தனக்குள் கேட்டுக்கொண்டாள் நந்தினி.

அது ஒரு டிராக்டர். தண்ணீர் பெருகிய இடத்துக்கு அப்பால் நின்றது.

“அக்கா… அக்கா…” – மழையின் இரைச்சலை மீறி ஒரு குரல் வந்தது.

“அக்கா… அக்கா… அங்கேயே நில்லுங்க…”

டிராக்டரில் இருவர் இருந்தனர்.

ஒருவர் இறங்கி வந்தார். வந்தவன் இளைஞன்.

“அக்கா… என்னிய தெரியல?… பக்கத்து ஊரு… இங்க ஊருக்குள்ள அதிகம் பார்த்திருக்க மாட்டீங்க…”

“தண்ணி பெருகுது…” என்றாள் நந்தினி.

“ஆமா… குளம் உடையப்போகுது… அதான் யாராவது இருந்தா பார்க்கலாம்னு வந்தோம்,” என்றார் டிராக்டரில் இருந்தவர்.

“அம்மா, என்னை பிடிச்சுங்கிடுங்க…” என்றான் கமலத்திடம்.

“யய்யா… தெய்வம் மாதிரி வந்திருக்கே…” கமலம் அவன் தோளைப் பற்றிக்கொண்டாள். இப்போது தண்ணீரின் இழுப்பை சமாளித்து அவளால் நிற்க முடிந்தது.

“அப்படி மெதுவா நடங்க…” பிள்ளைகளை தோள்களின்மேல் ஏற்றிக்கொண்டான்.

அவன் உடல் வயல் உழைப்பில் உறுதியாகி கல்போல் இறுகிப்போயிருந்தது.

“ஊருக்குள்ள யாரும் இல்லை… எங்கள யாரும் தேடவும் இல்லை…” – நந்தினியின் குரல் உடைந்திருந்தது.

“இந்த ஏரியாவில தண்ணி தங்கும்னு எங்க தாத்தா சொன்னாரு… அதனால பார்க்க வந்தோம்,” என்றான் டிராக்டரில் இருந்தவன்.

“ஒரு வீடு இருக்குது… மாடி வீடு… தண்ணி குறையற வரைக்கும் பிள்ளைங்க வச்சிக்கிடலாம்…” என்றான் முதலாமவன்.

டிராக்டர் புறப்பட்டது.

மழை, ஜாதி, மதம் பார்ப்பதில்லை; மனிதமும்!

இதையும் வாசியுங்கள்: சிறுகதை: கடனா? தர்மமா?

கதைகளை உடனுக்குடன் வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்

High Lights Studio