சிறுகதை: கடனா? தர்மமா?

சிறுகதை: புருஷோத்தமனின் மனைவி, "ஊர்ல இவர் பங்கு கிடைக்க கொஞ்சம் நாளாகும். கிடைச்சதும் பணத்தை கொடுத்துடறேன்," என்றாள். கஜபதி மனம் நொறுங்கிப்போனான்.
Spread the love

சிறுகதை: கஜபதியும் சிவராமனும் தங்கள் நண்பன் புருஷோத்தமனின் வீட்டுக்குச் சென்றார்கள்.

அது சனிக்கிழமை மாலை. அந்த நேரம் மட்டுமே அவர்களுக்கு வசதிப்படும். புருஷோத்தமன் தன் பிள்ளைகள் சிக்கன் பீசா விரும்பி கேட்பார்கள் என்று கூறியது நினைவிருந்ததால், பெரிய சிக்கன் பீசா ஒன்று வாங்கி சென்றார்கள்.

D Bros Media

புருஷோத்தமனின் மகன் ஆறாம் வகுப்பும், மகள் மூன்றாம் வகுப்பும் படித்தனர். புருஷோத்தமனின் மனைவி அவர்களைக் கண்டதும் மரியாதையாக வரவேற்றாள். பிள்ளைகள் கையில் பீசாவை கொடுத்ததும் மிகவும் சந்தோஷமானார்கள்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் புறப்பட ஆயத்தமானபோது, புருஷோத்தமனின் மனைவி, “ஊர்ல இவர் பங்கு கிடைக்க கொஞ்சம் நாளாகும். கிடைச்சதும் பணத்தை கொடுத்துடறேன்,” என்றாள்.

கஜபதி மனம் நொறுங்கிப்போனான்.

“நாங்க பணம் கேட்க வந்திருக்கோம்னும் நினைச்சிட்டீங்களா…-?”

“இல்லை… அது எப்படியும் தரவேண்டியதுதானே…?” அமர்ந்த குரலில் கூறினாள் அவள்.

“புருஷோத்தமன் எங்களுக்கு ஃப்ரண்ட் மட்டுமில்லைம்மா.. அவன் எங்களுக்கு கூடப் பிறந்த தம்பி மாதிரி…” என்றான் சிவராமன்.

புருஷோத்தமன், சிவராமன், கஜபதி மூன்று பேரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். கிட்டத்தட்ட பதினைந்து வருட நட்பு. புருஷோத்தமன் சிரிக்க சிரிக்க பேசுவான். வீட்டிலிருந்து என்ன கவலையோடு அலுவலகத்திற்கு வந்தாலும் அவன் பேசியே சிரிக்க வைத்து, மனதை ஆற்றிவிடுவான். டீ குடிப்பது, சாப்பிடுவது என்று அவர்கள் மூவரும் எப்போதும் ஒன்றாய் சுற்றிக்கொண்டே இருப்பர்.

சென்னையில் புறநகரில் புதிதாய் போடப்பட்ட ஒரு நகரில் புருஷோத்தமன் ஓர் இடம் வாங்கினான். அவன் வாங்கும்போதும் இருவரும் வந்து பார்த்தனர். நண்பன் வீடு கட்ட இருப்பதில் இருவருமே சந்தோஷப்பட்டனர். மனைவியின் நகை, கையில் இருந்து கொஞ்ச பணம் என்று போட்டு அந்த இடத்தை வாங்கினான். வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் வாங்கினான். மேற்கொண்டும் பணம் தேவைப்பட்டபோது, என்ன செய்வதென்று விழித்தான்.

எல்லோரையும் சிரிக்கவைக்கும் தங்கள் நண்பன் சோக முகமாய் இருப்பதை கஜபதியாலும் சிவராமனாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களும் புருஷோத்தமனை போல சம்பாதிப்பவர்களே. பெரிய வருமானம் கிடையாது. ஆனாலும், அவர்கள் இருவரும் தங்களுக்கு பேசி, ஒரு தொகையை ஏற்பாடு செய்து புருஷோத்தமனுக்கு கொடுத்தனர்.

“என்னடா… இப்படி பண்றீங்க..? உங்களுக்கு ஒரு அவசர தேவை வந்திச்சுன்னா…?” பதறினான் புருஷோத்தமன்.

“வரும்போது ஆண்டவன் பாத்துப்பான்டா… இப்போ இதை வச்சுக்க…” என்றான் கஜபதி.

“ஊர்ல கொஞ்சம் இடம் கிடக்குது… எனக்கு ஒரு பங்கு வரணும்… வரும்போது கண்டிப்பாக கொடுத்துடறேன்டா…இதை கடனா நினைச்சுக்கிறேன்” என்றான் புருஷோத்தமன்.

“நினைச்சுக்க… பொறுமையா கொடுடா… அவசரமில்லை… எங்க பிள்ளைங்க காலேஜ் போகும்போது கிடைச்சா போதும்…” என்றான் சிவராமன். கஜபதியும் தலையசைத்தான்.

எதிர்பாராதவிதமாய் ஒரு விபத்தில் புருஷோத்தமன் உயிரிழந்ததும் துடித்துப் போனார்கள் கஜபதியும் சிவராமனும். இதோ இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் அவன் குடும்பத்தை விசாரித்து செல்ல வந்திருக்கிறார்கள்.

“பணத்தை பத்தி நினைக்காதீங்கம்மா… அவனே போன பிறகு பணத்தை வாங்கி என்ன பண்ணப்போறோம்… திரும்ப தர வேண்டாம்” என்றான் சிவராமன்.

“ஏற்கனவே பணம் கொடுத்திருக்கோம்னு நினைச்சு எந்த உதவியும் கேட்காம இருந்திடாதீங்க…” கை கூப்பினான் கஜபதி.

மெள்ள தலையசைத்தாள் புருஷோத்தமனின் மனைவி. பிள்ளைகள் சிக்கன் பீசாவை சாப்பிட்டு முடித்து சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தனர்.

திரும்பி வரும் என்று நம்பி கடனாக கொடுத்ததை தர்மமாக எண்ணி விட்டுவிட மனம் வருமா?

தர்மம் செய்யும் மனநிலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை கமெண்ட் செக்சனில் பதிவு செய்யுங்கள்.

இதையும் வாசியுங்கள்: வாழ்வியல்: கவலை பெருங்கடல்

இதுபோன்ற கதைகளை உடனுக்குடன் வாசிப்பதற்கு எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின் தொடருங்கள்.

High Lights Studio