வாழ்வியல்: அதிகாரியாக பதவி உயர்வு பெற்று புதிய இடத்தில் பணியேற்க வந்தார் சடகோபன்.
அலுவலக பணியாளர்கள் அவரை வரவேற்க காத்திருந்தனர். அலுவலகத்தினுள் சடகோபன் நுழையும்போது, “ஐயா…” என்று அழைக்கும் குரல் கேட்டு திரும்பினார்.
அலுவலகத்தின் வெளியே இருந்த படிக்கட்டில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது கையில் வெள்ளை காகிதம் ஒன்று இருந்தது. கோரிக்கை மனுவாக இருக்கவேண்டும்.
“ஐயா, இப்போதான் சார்ஜ் எடுக்கிறாரு… நாளைக்கு வாங்க…” என்றார் ஓர் உதவியாளர்.
“இருங்க… ஒரு அஞ்சு நிமிஷத்தில வர்றேன்…” என்ற சடகோபன், உள்ளே சென்று புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
“ரொம்ப நன்றி… எல்லோரும் இடத்துக்குப் போய் வேலையை பாருங்க… தேவைனா கூப்பிடுறேன்,” என்று அனுப்பி வைத்தார்.
அலுவலகத்திற்கு வெளியே வந்தவர், மனு வைத்திருந்தவரிடம் வாங்கினார்.
“ஐயா, ஆறு மாசமா அலையுறேனுங்க… கை, கால் முடியாதவனுங்க… உதவி பண்ணுங்க…” என்று கும்பிட்டார் அவர்.
“ஆறு மாசமாக வர்றீங்களா?” அதிர்ச்சியாய் கேட்டார் சடகோபன்.
“ஆமாங்க ஐயா… பழைய ஆபீசரு தரலை… இன்னைக்கு புதுசா ஆபீசரு வர்றாருன்னு சொன்னாங்க… அதுதான் வந்தேன்,” என்றார்.
சடகோபன், முறையான விண்ணப்பத்தை பதிவு செய்ய உதவும்படி தன் உதவியாளரை பணித்தார்.
“தேவையான விவரங்களை கொடுங்க… மூன்று நாள் கழிச்சு வாங்க… உதவி தொகை கிடைக்கும்…” என்றார். மனு கொண்டு வந்திருந்தவர் கையெடுத்து கும்பிட்டார்.
பத்து ஆண்டுகள் முன்பு நடந்தது சடகோபனுக்கு நினைவுக்கு வந்தது.
அவர் பட்டப்படிப்பு முடித்து வேலைக்காக நாயாக அலைந்து திரிந்துகொண்டிருந்த நாள்கள் அவை. கஷ்ட குடும்ப பின்னணி. அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வையும் எழுதியிருந்தார். ஆண்டவன் அருளால் தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு வந்திருந்தது. கேட்டிருந்த சான்றிதழ்களை அலைந்து திரிந்து வாங்க வேண்டியதிருந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு முந்தைய தினம் வரைக்கும் ஓடியாடி வேலையை முடித்தார்.
அதிகாலையில் சென்னை சென்று சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு பேருந்து ஏறியவருக்கு, செங்கல்பட்டு அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர் அதுவரைக்கும் சென்னைக்கு வந்ததில்லை. வாகனங்கள் அங்குலம் அங்குலமாக நகர்ந்தன;பின்னர் நின்றன.
சென்னை பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வந்தபோது வெயில் உறைக்கத் தொடங்கியிருந்தது. காலை ஒன்பதரை மணிக்கு தேர்வாணையத்திற்குப் போக வேண்டும். மணி எட்டரையை தாண்டியிருந்தது.
ஊர் புதியது. என்ன செய்வதென்று தெரியவில்லை. பேருந்து நிலையத்திற்கு வெளியே ஆட்டோ விசாரிக்கலாம் என்ற எண்ணம் வரவே பதற்றமாக வெளியே வந்தான் இளைஞன் சடகோபன். இரவு பயணத்தின் களைப்பு முகத்தில் அப்பியிருந்தது. கையில் கிராமத்து பை.
ஆட்டோ ஓட்டுநர்கள் அவன் வரட்டும் என்று ஆட்டோவில் சாய்ந்து நின்றிருந்தனர்.
“தம்பீ…” – யாரோ கூப்பிடும் சத்தம்.
தன்னை யாரும் கூப்பிட மாட்டார்கள் என்ற உறுதியோடு ஆட்டோவை நோக்கி நடந்தான் சடகோபன்.
“தம்பீ…” – இப்போது திரும்பினான்.
சற்று தொலைவில் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்தவர்தான் கை அசைத்து அழைத்தார்.
அவநம்பிக்கையாய் அவரை அணுகினான்.
“எங்கே போகணும்…?”
“டிஎன்பிஎஸ்சி ஆபீசுக்கு சார்… சர்ட்டிபிகேட் வெரிஃபிகேஷனுக்கு…”
“ஏறுங்க…” மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையை காட்டினார்.
“இதுதான் ஆபீஸ்…” ஓர் அலுவலகத்தின் முன்பு நிறுத்தினார் அவர்.
“சார்… சார்… ரொம்ப நன்றி சார்…” தழுதழுத்தான் சடகோபன்.
“தம்பி… இது நான் வழக்கமா பண்ற உதவிதான்… வேற என்ன பண்ணிட முடியும்? நான் ஒரு பிரைவேட் ஆபீசுல வேலை பார்க்கிறேன்… மனசுக்கு திருப்தியா ஏதாவது பண்ணனும்னு தினமும் ஆபீசுக்கு கிளம்பும்போது பஸ் ஸ்டாண்டு பக்கத்தில நிப்பேன்… உங்களைப் போல வேலை தேடி வர்றவங்களுக்கு உதவுறதில ஒரு திருப்தி…. காசு, பணம் செலவழிச்சு என்னால பண்ண முடியாது…” என்றார் அவர்.
தலையசைத்தான் சடகோபன்.
“உங்களுக்கு வேலை கிடைக்கும்… உங்களால முடிஞ்ச உதவியை… பெரிசா இல்ல தம்பி… முடியுற உதவியை மத்தவங்களுக்கு செய்ங்க…தர்மம் தழைக்கணும் தம்பி,” அவர் மோட்டார் சைக்கிளில் நகர்ந்துவிட்டார்.
அன்றைக்கு மிகவும் அவசரமான நேரத்தில் உதவிய அவரது வேண்டுகோளை இதுவரை மறக்கவில்லை சடகோபன். இதோ, அதிகாரியான முதல் நாளே தன்னால் இயன்ற உதவியை ஒருவருக்கு செய்து விட்டார்.
தர்மம் தழைக்குமா? உங்கள் கருத்துகளை கமெண்ட் செக்சனில் தெரிவியுங்கள்.
இதையும் வாசியுங்கள்: வாழ்வியல்: தர்மமா? கடனா?
கதைகளை உடனுக்குடன் வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்