சிறுகதை: வரிசையை முன்னால் எட்டிப்பார்த்தாள் ருக்மணி. இவள் ஏழாவது ஆள். “யப்பா ஒரு வழியா நெருங்கியாச்சு,” மனம் சந்தோஷப்பட்டது.
கையில் வைத்திருந்த பையை ஒருமுறை பார்த்தாள். ஆதார் கார்டு, மின்கட்டண ரசீது, குடும்ப அட்டை, பேங்க் பாஸ்புக் எல்லாம் இருந்தன.
இந்த கரண்ட் பில்லை தேடி எடுப்பதுதான் கொஞ்சம் கஷ்டமாகி விட்டது அவளுக்கு.
“இப்போ எதுக்கு உனக்கு அது?” – அவள் கணவன் ராமநாதன் பிடி கொடுக்காமல் பேசினார்.
“உங்க கிட்டே வேறே எதுவும் கேட்டேனா? வழக்கமா கட்டுற பில்லை எங்கே வைப்பீங்கன்னுதானே கேட்டேன்?” என்றாள் ருக்மணி.
ராமநாதன் இப்போது ஐநூறு ரூபாய் புரட்டக்கூட முடியாத நிலையில் இருக்கிறார் என்பது ருக்மணிக்கு நன்றாக தெரியும். ஆனால் அதை அவர் வாய் விட்டு சொல்வதில்லை அவ்வளவுதான்!
“கவர்மெண்டு இல்லாதவங்களுக்குக் குடுக்குற காசை வாங்கணும்னு உனக்கு எதுக்கு ஆசை?” நேற்று இரவு சாப்பிடும்போது கேட்டார்.
“கவர்மெண்டுதானே குடுக்குது வாங்குறதுல என்ன தப்பு?” ருக்மணி சிரித்தபடியே கேட்டாள்.
“நீ அவ்வளவு கஷ்டமா படுறே? ஆண்டவன் உனக்கு படியளக்கலையா?” ரங்கநாதனும் சிரித்தபடியே கேட்டார்.
ஆமா… அவன்தான் குடுக்குறான்னு நினைச்சுக்கவேண்டியதுதான்”
ருக்மணிக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமா என்று வியந்து பார்த்தார் ரங்கநாதன்.
“என்ன சேனைக்கிழங்கு வத்தலை அப்படி சாப்பிடுறீங்க…. உப்பு! போதும்,” பாத்திரத்தை நகர்த்தி வைத்தாள்.
“இன்னொருவாட்டி யோசிச்சிக்க… வரிசையில போய் நின்னு என்னை கேவலப்படுத்தாதே,” என்றார் ரங்கநாதன்.
“நான் திருட போறேனா, ஏமாத்த போறேனா ஒரு கேவலமும் இல்ல கவலைப்படாதீங்க,” ருக்மணி பதில் கொடுத்தாள்.
ரங்கநாதன் அமைதியாக எழுந்துபோனார்.
அவரைப் பார்க்க பாவமாக இருந்தது ருக்மணிக்கு.
எப்படி வாழ்ந்த மனுஷன்? நினைத்துப் பார்த்தாள் அவள்.
அப்போது இருபதுபேர் வேலை பார்த்தார்கள் அவர் கடையில். இரவும் பகலும் இடைவிடாமல் அடுப்பு எரியும். அவ்வளவு சரக்கு ஓடும்.
ருக்மணிக்கு பண விஷயமோ கடை விஷயமோ தெரியாது. ஏதாவது விசேஷங்களுக்கு போகவேண்டுமென்றால் நான்கு நாள்களுக்கு முன்பிருந்தே அவருக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.
ஒரு காலத்தில் அடுப்பில் நின்று வேலை பார்த்தவர், பிறகு மாஸ்டர் வைத்தார். இதோ வாழ்க்கை புரட்டிப்போட்டதில் மீண்டும் அடுப்பில் நிற்கிறார்.
ருக்மணி ஸ்வீட் ஸ்டால் அவ்வளவு பிரசித்தி பெற்று இருந்தது. ரங்கநாதன் வாடகைக்குக் கடை வைத்திருந்த இடத்தை சொந்தமாக வாங்கி ஆறே மாதத்தில் அந்தச் செய்தி வந்தது – பாலம் கட்டுவதற்காக எடுக்கப்படும் இடத்தில் ரங்கநாதனின் கடையும் இருக்கும் செய்தி.
ரங்கநாதன் உடைந்துபோகவில்லை. இழப்பீட்டு பணம் கிடைத்தது. உடனே நிலம் வாங்க முடியாவிட்டாலும் அடுத்த சாலையில் ஒரு இடத்தை வாடகைக்குப் பிடித்துக் கடை போட்டார்.
ஏனோ முன்பு அவர் கடையில் விற்பனையானதுபோல் இங்கே பண்டங்கள் விற்பனையாகவில்லை. பார்ப்பவர்களிடம் எல்லாம் தெரிந்தவர்களை இங்கே அனுப்பி வைக்கும்படி கூறினார். யாரோ ஒன்றிரண்டு பழைய வாடிக்கையாளர்கள் வந்தனரே தவிர, சொல்லிக்கொள்ளும்படி வியாபாரம் இல்லை.
அவர் வியாபாரம் விழுந்த இரண்டே வருடங்களில் பிள்ளைகள் இருவரும் அடுத்தடுத்த வருடங்களில் எஞ்ஜினியரிங் கல்லூரிகளில் சேரும்படி நின்றனர்.
ரங்கநாதன் வெளியே எதுவும் சொல்லாவிட்டாலும் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளுக்குள் திகைத்தார். அவருக்குத் தெரிந்தது இந்த ஸ்வீட் தொழில்தான்.
தினமும் கடையை பெயருக்கு திறந்து வைத்திருந்தார். ருக்மணிக்கு ஓரளவுக்கு நிலைமை புரிந்தது.
இருவரும் தெரிந்த இடங்களில் சொல்லி பரிகாரம் கூட செய்து பார்த்தனர். வித்தியாசம் எதுவும் தென்படவில்லை.
ரங்கநாதன் கௌரவமாக வாழ்ந்தவர்; எங்கும் தலைகுனிய விரும்பாதவர் என்பதெல்லாம் ருக்மணிக்கு தெரியும். அவருக்கு ஆயிரம் ரூபாய் பெரிய காரியமாக இல்லாதிருந்த நாள்கள் இருந்தன. இப்போது ஏதோ கிடைப்பதை வாங்கினால் அவருக்கும் சற்று சுமை குறையுமே என்ற எண்ணத்துக்கு வந்திருந்தாள் அவள்.
இன்னும் இரண்டு பேர்தான். ருக்மணியின் முறை வந்துவிடும்.
ருக்மணிக்கு ஏனோ கணவர் ரங்கநாதனின் முகம் கண் முன் வந்தது.
“என்னை கேவலப்படுத்தாதே” அவர் கண் முன்னே நின்று சொல்வதுபோல் இருந்தது. மனம் ஒருமுறை தடுமாறியது.
சட்டென்று வரிசையிலிருந்து விலகி வீட்டை நோக்கி நடந்தாள். வீட்டை விட்டு வந்து இரண்டு மணி நேரம் கடந்திருந்தது.
வீட்டை அடைந்தவள், உள்ளே ரங்கநாதன் இருப்பதை பார்த்தாள்.
“எங்கே போயிட்டே…?”
“இங்கேதான் சட்டை தைக்க கொடுக்க… என்னாச்சு?”
“உன் அண்ணன் பையன் வந்திருந்தான்… மூத்தவன்…”
“செந்திலா, என்னவாம்…?” ஆவலுடன் கேட்டாள் ருக்மணி.
“அண்ணன் வீட்டில கல்யாணம் வந்திராதான்னு ஏங்குவியே?” அவர் சீண்டினார்.
“சொல்லுங்களேன்…” அந்த வயதிலும் குரலில் கொஞ்சல் தெரிந்தது.
இதையும் வாசியுங்கள்:சிறுகதை: அவன் சொன்ன காரணம்
“ஏதோ ஆன்லைன்ல ஸ்வீட் கடை வைக்கபோறானாம்… மொபைல் போன்ல இருந்த இடத்தில இருந்து ஆர்டர் குடுப்பாங்களாம்… பணம் அனுப்புவாங்களாம்… இவன் ஸ்வீட்டை அனுப்பி வைப்பானாம்…”
“இன்சினியரிங் படிச்சுட்டு யாவாரமா பண்ண போறானாம்…?” அசிரத்தையாய் கேட்டாள் ருக்மணி.
“இதில நிறைய சம்பாதிக்கலாமாம்… மாமா நீங்கதான சரக்கு போட்டு தரணும்… மாஸ்டர் வச்சிக்குங்க… தரத்தை மட்டும் நீங்க செக் பண்ணி குடுங்கன்னு பணம் அட்வான்ஸ் கொடுத்திட்டு போயிருக்கான்,” என்றார்.
மேசையின் மீது இருந்த பணத்தை கையில் எடுத்தாள் ருக்மணி.
மூன்று வருடங்களுக்குப் பிறகு இவ்வளவு பணத்தை இப்போதுதான் கையில் எடுக்கிறாள். எண்ணிப் பார்த்தாள். இரண்டு லட்ச ரூபாய் இருந்தது.
“என்னங்க இவ்வளவு குடுத்திருக்கான்… எங்க அண்ணனுக்கு தெரியுமா?”
“எல்லாம் தெரியுமாம்… அவரும் பேசினாரு… கொஞ்சம் சரக்கு கொடுத்து உதவுங்கண்ணு சொன்னாரு…” என்றார்.
“மாஸ்டர் பாத்திட்டீங்களா?”
“போன் பண்ணியிருக்கேன்… ஞாயிற்றுக்கிழமை வர்றேன்னு சொல்லியிருக்காரு… விக்கிறதுல கமிஷன் தந்திருவேன்னு சொல்லியிருக்கான்… பெயர் கூட ருக்மணி ஆன்லைன் ஸ்வீட்ஸ்னுதான் வைக்கிறானாம்…” என்றார்.
சோறு வைப்பதற்காக ஸ்டவ்வின் முன்பு நின்றிருந்த ருக்மணியின் கண்களிலிருந்து அவளையுமறியாமல் கண்ணீர் ஸ்டவ்வின் மீது விழுந்து தெறித்தது.
கதைகளை உடனுக்குடன் வாசிப்பதற்கு எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-இல் பின்தொடருங்கள்!