சிறுகதை: ஊரில்லா உறவு

சிறுகதை: லட்சுமி பாட்டிக்கு எந்த ஊர் என்று யாருக்கும் தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பாட்டியை இப்படியே தான் பார்த்து வருகிறேன்.
Spread the love

சிறுகதை: லட்சுமி பாட்டியின் இறப்பு செய்தி அரை மணி நேரத்திற்குள் ஊர் முழுவதும் பரவி விட்டது.

மோட்டார் சைக்கிள்களும், சைக்கிள்களும் அவள் வீட்டைச் சுற்றி நின்றன.

D Bros Media

“காலம்பற ஆறு மணிக்கெல்லாம் வாசல் தெளிப்பாளே… ஆறரை வரைக்கும் ஆள காணோமேன்னு சத்தம் குடுத்தேன்… பதில் இல்லை… போய் பார்த்தா…” என்று கலா அக்கா எல்லோரிடமும் விளக்கிக்கொண்டிருந்தாள்.

லட்சுமி பாட்டிக்கு எந்த ஊர் என்று யாருக்கும் தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பாட்டியை இப்படியே தான் பார்த்து வருகிறேன். சிறிய வயதில் நான் வயிற்றுவலியில் துடிக்கும்போது அம்மா பாட்டியிடம்தான் மருந்து கேட்பாள். பாட்டி வீட்டுக்கு வந்து, அடுப்பங்கரைக்குள் புகுந்து, ஏதோ ஒன்றை செய்து, வெந்நீர் போட்டு வந்து எனக்குக் கொடுப்பாள். ஊரில் யாராவது உடம்பு சரியில்லை என்று பாட்டிக்கு தெரிந்துவிட்டால், அவளுக்குத் தெரிந்த மருந்தைக் கொடுப்பதோடு, உடம்பு சரியாகும் வரைக்கும் விசாரித்துக்கொண்டே இருப்பாள்.

ஒருமுறை அடுத்த தெருவிலிருக்கும் அம்புஜம் அத்தைக்கு உடம்புக்கு அதிகம் முடியவில்லை. பாட்டியின் வைத்தியமோ, உள்ளூர் கம்பவுண்டர் வைத்தியமோ கைக்கொடுக்கவில்லை. அப்போது பக்கத்து ஊர் சரவணன் டாக்டர் ஆஸ்பத்திரியில் அம்புஜம் அத்தையை சேர்த்தார்கள். அத்தை நான்கு நாள்கள் அங்கே இருந்தாள். நான்கு நாள்களும் பாட்டி அத்தையுடனே இருந்தாள். கூடமாட உதவி செய்துகொண்டு, ஆஸ்பத்திரியில் தரையில் படுத்துக்கொண்டு, துணையாயிருந்தாள்.

ஊரில் உள்ள அத்தனை பிள்ளைகளும் பாட்டியின் கை படாமல் வளர்ந்திருக்க முடியாது. யார் வீட்டில் குழந்தை பிறந்தாலும் பாட்டிதான் குளிப்பாட்டுவாள். பேறுகால உதவிகள் செய்வாள். பிள்ளைகள் பள்ளிக்குப் போய் வரும்போது, அப்பா, அம்மா வீட்டில் இல்லையென்றால் ஒன்று தன் குடிசைக்குள் அழைத்து வைத்திருப்பாள்; இல்லையெனில் பெற்றோர் வரும் வரைக்கும் அந்த வீட்டு வாசலில் உட்கார்ந்திருப்பாள். ஊரை செல்போன் ஆக்கிரமிக்கும் வரைக்கும் இரவில் தெருவிளக்கு வெளிச்சத்தில் கால்நீட்டி உட்கார்ந்து பிள்ளைகளுக்கு கதைகள் சொல்லுவாள்.

ஆனால், லட்சுமி பாட்டி வீட்டுக்கு உறவினர் என்று யாரும் வருவதை நான் ஒருநாளும் பார்த்ததில்லை. ஆனால், ஊரில் அத்தனை பேர் உறவினரும் பாட்டிக்குத் தெரியும். எந்த ஊரில் யார் சம்பந்தம் செய்திருக்கிறார்கள்; அந்த சம்பந்தக்காரர் எந்த ஊரில் சம்பந்தம் செய்திருக்கிறார் என்பது வரைக்கும் பாட்டி தெரிந்து வைத்திருப்பாள்.

“எம்மாடி, தாசில்தார் ஆபீஸ் பக்கம் உன் சம்பந்தக்காரரை பார்த்தேன்…” என்று உரிமையாகக் கூறுவாள்.

எந்த வீட்டிலும் ஏதாவது விசேஷம் என்றால், ஒரு வாரம் முன்பிருந்தே அந்த வீட்டில் உதவிகள் செய்ய சென்று விடுவாள்.

யாராவது பெண்கள் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு அயலூருக்குச் செல்லவேண்டுமென்றால் பாட்டியை துணைக்கு அழைத்தால்போதும் வந்து விடுவாள். ஊரை விட்டு வெளியே அதிகமாக செல்லாதிருந்தாலும் எந்த ஊருக்கு டவுண் பஸ் எப்போது செல்லும் என்று விசாரித்து வைத்திருப்பாள். பெண்களுக்குக் கட்டணம் இல்லாத பேருந்திலேயே அழைத்துச் சென்று அழைத்து வருவாள்.

லட்சுமி பாட்டியை பற்றி மறக்கவே முடியாத விஷயம் ஒன்று உண்டு. ஊருக்கு வெளியே ரைஸ் மில் உள்ளது. மசாலா மிஷன் தனியாக இருக்கும். ஒருநாள், பொழுதடையும் நேரத்தில் அந்த வழியாக வந்த பெண் ஒருத்தியின் தங்கச் சங்கிலியை திருடன் ஒருவன் அறுக்க முயற்சித்திருக்கிறான். அப்போதுதான் பாட்டி தன் ஆடுகளை காட்டிலிருந்து அழைத்து வந்திருக்கிறாள்.

“கள்ளன்… கள்ளன்…” அந்தப் பெண்ணின் கூக்குரல் சாலையில் பட்டு தெறித்து யார் காதுகளையும் அடையாமற் போனது. காட்டுக்குள் நின்றிருந்த பாட்டியின் காதுகளில் மட்டும் போய் விழுந்தது அந்த சத்தம்! பாட்டி நேராக சாலைக்கு ஓடி வந்திருக்கிறாள். ரைஸ் மில் பக்கமிருந்து திருடனும் ஓடி வந்திருக்கிறான். ஆட்டுக்கு தழை பறிக்கும் அரிவாளை திருப்பி தலையில் ஒரே அடி. இரத்தம் கொட்ட கீழே விழுந்தான் திருடன்.

பாட்டியை எந்த வகையில் சேர்ப்பது என்பதே தெரியாது. நான் முதன்முதலில் ஸ்மார்ட் போன் வாங்கியபோது, “பாட்டி… சிரி…” என்று ஒரு ஃபோட்டோ எடுத்து பாட்டிக்குக் காட்டினேன். பாட்டிக்கு அவ்வளவு சந்தோஷம்!

பாட்டி வீட்டின் முன் ஊர் முழுவதுமே கூடியியிருந்தது. ஊர்க்காரர்கள் மட்டுமல்ல, ஊரிலிருந்து கல்யாணமாகி வேறு ஊருக்குச் சென்றிருந்த பெண்கள் கூட ஜிபே மூலம் பணம் அனுப்பியிருந்தனர். வெளிநாட்டில் இருந்துகூட சிலர் பாட்டியின் ஈமச்சடங்குக்கு பணம் அனுப்பியிருந்தார்கள் என்று கேள்வி.

பாட்டிக்கு உறவு என்று யாருமே இல்லை. ஆனால், யாருக்கும் இல்லாதவண்ணம் ஊரே திரண்டு வழியனுப்ப வந்திருந்தது. பாட்டியை நான் எடுத்த ஃபோட்டோவை பெரிதாக ஃபிளக்ஸ் பிரிண்ட் எடுத்து வீட்டின் முன் வைத்தேன். பாட்டி சிரித்துக்கொண்டிருந்தாள்.

இதையும் வாசியுங்கள்: சிறுகதை: பால்கனி நிலவு

சிறுகதைகளை உடனுக்குடன் வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்

High Lights Studio