சிறுவர் கதை: ஒரு காட்டில் குருவிகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அவற்றுள் ஒரு குருவியின் பெயர் சாந்தோ. சாந்தோ, எப்போதும் நிதானமாக இருக்கும். எதையும் யோசித்தே செய்யும்.
ஒருநாள் காட்டின் ஒரு பகுதியில் ஓரிடத்தில் தானியங்கள் சிதறிக் கிடந்தன. அவற்றைப் பார்த்த குருவிகள், உடனே அவற்றை சாப்பிடவேண்டும் என்று கிளம்பின.
சாந்தோ குருவி, எப்படி காட்டுக்குள் திடீரென இவ்வளவு தானியம் வந்தது? நிதானமாக யோசித்து முடிவெடுப்போம் என்றது. ஆனால், மற்ற குருவிகளுக்கு பொறுமை இல்லை. அவை பறந்துபோய் அந்த தானியங்களின் மேல் அமர்ந்தன. ஒவ்வொரு குருவியாக போய் உட்கார்ந்து, தானியங்களைக் கொத்தி தின்றன.
சற்று தள்ளி அமர்வதற்காக எழுந்தபோது, அவற்றால் எழும்ப இயலவில்லை. ஆம்! அவற்றின் கால்கள் வலைக்குள் சிக்கியிருந்தன. அப்போதுதான் குருவிகளுக்கு சாந்தோவின் எச்சரிக்கை நினைவுக்கு வந்தது. சற்று நிதானித்திருந்தால் இந்த ஆபத்தில் சிக்காமல் தப்பியிருக்கலாம் என்று எண்ணின.
மரத்தின் மேல் இருந்த சாந்தோ, இதைப் பார்த்துக்கொண்டிருந்தது. தூரத்தில் வேடன் வந்து கொண்டிருந்தான்.
குருவிகள், சாந்தோ எங்களைக் காப்பாற்று… எங்களைக் காப்பாற்று என்று கூச்சலிட்டன. குருவிகளின் கூச்சலைக் கேட்ட வேடன் வேகமாக வந்தான். சாந்தோ, பறந்து வந்து அதுவும் மற்ற குருவிகளுடன் உட்கார்ந்து கொண்டது.
அப்போது மற்ற குருவிகள், நீ எப்படியாவது எங்களைக் காப்பாற்றுவாய் என்று எண்ணினால், நீயும் வந்து மாட்டிக்கொண்டாயே என்று கேட்டன. சாந்தோ பேசாமல் இருந்தது.
வேடன் வந்து நிறைய குருவிகள் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான். அவற்றை வலையோடு தூக்கிக் கொண்டு வீட்டுக்குக் கொண்டு சென்றான்.
அன்றைக்கு மாலையாகிவிட்டதால் மறுநாள் அவற்றை சந்தையில் விற்கலாம் என்று எண்ணி வீட்டின் பின்புறம் இருந்த கூண்டுக்குள் அவற்றை அடைத்தான்.
கூண்டுக்குள் குருவிகள் அங்குமிங்கும் சிறகடித்துப் பறந்து தப்பிக்க முயற்சித்தன. அந்தோ! எல்லாம் கூண்டின் கம்பி வலையில் மோதி விழுந்தன. சில குருவிகளுக்கு காயமும் ஏற்பட்டது.
அப்போதும் சாந்தோ, கொஞ்சம் நிதானமாக யோசிப்போம் என்றது.
ஆபத்தில் சிக்கிக்கொண்டோம் இனிமேல் நிதானமாக யோசித்து என்ன நடக்கும்? என்று கூறிக்கொண்ட குருவிகள், வேகமாக வேகமாக பறந்து தப்பிக்க முயற்சித்தன.
சாந்தோ நிதானமாக இருந்தது. கூண்டை முழுவதும் சுற்றிப் பார்த்தது. கூண்டின் கீழ்ப்பகுதியில் பலகை சற்று உடைந்திருந்தது. சாந்தோ, அந்த இடைவெளி வழியாக நுழைந்து பார்த்தது. ஆஹா! அதன் உடல் இடைவெளியில் நுழைந்தது. சாந்தோ, கூண்டை விட்டு வெளியே வந்துவிட்டது.
சாந்தோ, ஃப்ரண்ட்ஸ் இப்போ பதற்றப்படாம எல்லோரும் இந்த இடைவெளி வழியா வெளியே வாங்க என்றது.
குருவிகள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன. சந்தோஷமாக பறந்து காட்டுக்கு திரும்பின. அனைத்து குருவிகளும் சாந்தோவுக்கு நன்றி கூறின; இனி தாங்கள் எல்லா காரியத்திலும் நிதானமாகவே முடிவெடுப்போம் என்று உறுதி கூறின.
நீதி: பொறுமையும் நிதானமும் புத்திசாலியின் ஆயுதங்கள்