வாழ்வியல்: தர்மமா? கடனா?

வாழ்வியல்: "நா உங்கிட்டே எதிர்பார்ப்பேனா? அதுவும் பையன் படிப்பு குடுத்த பணத்தை... நீ கடனா நெனச்சுக்காதே..." என்றேன்.
Spread the love

வாழ்வியல்: கிருஷ்ணனின் மகன் இரவு வருவதாக போன் செய்திருந்தான்.

கிருஷ்ணன் என் உறவினன். ஒரே ஊரில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். நான் சென்னைக்கு வந்து தொழில் செய்து வசதியாகிவிட்டேன். அவன் ஊரில் விவசாயம் செய்து கொண்டிருந்தான்.

D Bros Media

பத்து வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணன், அவன் மகனை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்திருந்தான். அவன் மகன் ப்ளஸ் டூ பாஸ் செய்திருப்பதாகவும், எஞ்ஜினியரிங் படிக்க விரும்புவதாகவும் கூறினான். ஊருக்கு பக்கத்திலேயே ஒரு எஞ்ஜினியரிங் கல்லூரியில் சேர்க்க விசாரித்தபோது பணம் போதவில்லை என்று கூறினான்.

கிருஷ்ணனின் மகன் பெயர் நவீன். நவீன் ஓரளவு நல்ல மதிப்பெண்களே பெற்றிருந்தான். ஆனாலும் நான் கிராமத்தில் மாணவனாக இருந்தபோது எப்படியிருந்தேனோ அதேபோல் இருந்தான்.

“நல்லா படிக்கணும் என்ன?” சற்று கடுமையான குரலில் கூறினேன்.

“ம்ம்…” என்று தலையசைத்தான் நவீன்.

“சரி மாமான்னு சொல்லுல…” என்றான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன், என்னை ‘என்ன மாப்பிள்ளை’ என்று உற்சாகமாக அழைத்ததுபோல், ‘மாமா’ என்று அழைக்க வரவில்லை நவீனுக்கு. ஒருவேளை என் வீட்டின் தோற்றமும், என் தோற்றமும் அவனுக்கு அந்நியமாக இருந்திருக்கலாம். அன்று ஒரு லட்ச ரூபாய் கொடுத்தேன்.

“மாப்பிள்ள கையிலே பைசா வரும்போது கொஞ்சங்கொஞ்சமாக குடுத்துடுறேன்,” என்றான் கிருஷ்ணன்.

“நா உங்கிட்டே எதிர்பார்ப்பேனா? அதுவும் பையன் படிப்பு குடுத்த பணத்தை… நீ கடனா நெனச்சுக்காதே…” என்றேன். ‘எவ்வளவோ பணம் தர்மம் பண்றேன். இதுவும் அப்படி இருந்துவிட்டு போகட்டும்’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

நான்கு வருடங்களுக்குள் கிருஷ்ணன் தவறிய செய்தி எனக்கு வந்தது. அவசர அவசரமாக விமானம் பிடித்துச் சென்று வந்தேன். அவன் பையனைப் பற்றி மறந்துபோனேன்.

ஒருநாள் தபாலில் எனக்கு திருமண அழைப்பிதழ் வந்திருந்தது. அது கிருஷ்ணனின் மகன் நவீனின் திருமண அழைப்பிதழ். அப்போது கிருஷ்ணன் தவறி, எட்டு வருடங்கள் கழிந்திருந்தது. ஏதோ ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்ப்பதாக அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது. எனக்கு ஊருக்குப் போக முடியவில்லை. பிறகு நான் அதை மறந்துவிட்டேன்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன், என் அலுவலக தொலைபேசி வழியாக எனக்கு ஒரு செய்தி வந்தது. கிருஷ்ணனின் மகன் என்று ஒருவர் உங்களை வீட்டுக்கு வந்து சந்திக்க அனுமதி கேட்கிறார் என்று என் செயலாளர் கூறினாள்.

‘பத்தாம் தேதி வருகிறேன் என்கிறார்’ என்றாள்.

‘சரி. பத்தாம் தேதி இரவு ஏழு மணிக்கு வரச்சொல்,’ என்றேன்.

ஏழு மணிக்கு வருகிறவர்களை உள்ளே அனுப்பும்படி செக்யூரிட்டியிடம் கூறியிருந்தேன்.

சரியாக ஏழு மணிக்கு நவீன் வந்துவிட்டான். கூடவே அவன் மனைவியும்.

“மாமா… அப்பாவோட ஃப்ரண்ட்…” என்று அறிமுகம் செய்தான்.

அந்தப் பெண் கை கூப்பினாள்.

“வாங்க… உட்காருங்க…”

நவீனின் முகத்தில் இப்போது கிருஷ்ணனின் சாயல் தென்பட்டது.

“மாமா… இன்னைக்கு அப்பா தவறிய நாள்… பத்து வருஷம் ஆயிட்டு…” என்றான் நவீன்.

“பத்து வருஷம்… எவ்வளவு வேகமாக நாள் ஓடுது…” என்றேன் கிருஷ்ணனை நினைத்தபடி.

“மாமா இந்தாங்க…” பையினுள் கை விட்டு ரூபாய் கட்டு ஒன்றை எடுத்து நீட்டினான்.

“இது….”

“பத்து வருஷத்துக்கு முன்னே நான் படிக்க கொடுத்தது மாமா…”

“நான் திரும்ப வேண்டாம்னு சொன்னனே…” சற்று திகைத்தேன் நான்.

“ஆமா மாமா… இப்போ நான் நல்லா இருக்கேன்… ஒய்ஃபும் சாஃப்ட்வேர்தான்,” என்று ஒரு பெரிய கம்பெனியின் பெயரை சொன்னான்.

“உங்க கிட்டே இந்தப் பணம் இருந்தா வேறு யாருக்கும் பயன்படும்..” என்று கையில் கொடுத்தான்.

“வர்றோம் மாமா…” – விடைபெற்றார்கள் நவீனும் அவன் மனைவியும்.

தர்மம் என்று நினைத்துக் கொடுத்தது அப்படியே திரும்புமா? திரும்பியிருக்கிறது!

தர்மம் என்று கொடுத்தது அப்படியே திரும்புமா? தர்மத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை கமெண்ட் செக்சனில் பதிவு செய்யுங்கள்.

இதுபோன்ற சிந்தனைகளை தொடர்ந்து வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்

இதையும் வாசியுங்கள்: பிளட் பிரஷர் – ஏன் எச்சரிக்கை அவசியம்?

High Lights Studio