சிறுகதை: “ராஜி” – தன் அறையிலிருந்து அழைத்தான் முகேஷ்.
“என்னங்க…?” சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் ராஜேஸ்வரி. அவள் குரலில் அலுப்பு தெரிந்தது.
“வாயேன்…”
“ஸ்டவ்ல பாத்திரத்தை அப்படியே விட்டுட்டு வர முடியுமா?”
ஐந்து நிமிடம் கழித்து துண்டால் முகத்தை துடைத்தபடி, “சொல்லுங்க…” என்றவாறு வேகமாக வந்தாள் ராஜேஸ்வரி.
“இங்கே பாரேன்… நம்ம கம்பெனியிலே இருந்து புதுசா ஒரு புராஜக்ட் எடுத்திருக்கிறோம்..” – மடிக்கணினியில் தான் பார்த்துக்கொண்டிருந்ததை அவளிடம் காட்டினான்.
“ஏது.. தினமும் காலையிலே கிளம்பி போவீங்களே? சரி.. சரி.. நல்லா பண்ணுங்க…” – ராஜேஸ்வரி படபடத்தாள்.
“பாரேன் ராஜி… இதை நான் எப்படி முடிக்கப்போறேன்னா…” – முகேஷ் விளக்க முற்பட்டான்.
“நான் சமையலை முடிச்சு உங்க பிள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம்… பிறகு வர்றேன்,” – சமையலறைக்கு விரைந்தாள் அவள்.
முகேஷ், புதிதாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கிறான். சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தவேண்டும் என்ற இலட்சியம் டிப்ளமோ படிக்கும்போதே அவனுக்கு இருந்தது.
அனுபவத்திற்காக மட்டுமல்ல, உடனடியாக முதல் போட்டு எதையும் நடத்தக்கூடிய அளவு குடும்ப பின்னணி இல்லாததாலும் அவன் வேலைக்குச் சென்றான்.
சாதாரணமான வேலையில் சேர்ந்தான். பிறகு பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு மாறினான். ஓரளவு பணம் சேர்த்தான். மீண்டும் இன்னொரு நிறுவனத்தில் நிர்வாக பொறுப்பில் இணைந்தான். தொழில் திறமையோடு நிர்வாகத்தையும் கற்றுக்கொண்டான்.
வேலை… வேலை… வேலை… – ராஜேஸ்வரி, திருமணமான நாள் முதல் இப்படித்தான் முகேஷை பார்த்து வருகிறாள்.
வீட்டிலிருக்கும் நேரத்திலும் மொபைல் போனில் தொடர் அழைப்புகள். சலிக்காமல் வேலையை சொல்லி வழிநடத்துவான். பொறுமையாய் சந்தேகங்களை விளக்குவான்.
பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தது, கொண்டு விட்டு அழைப்பது, சமையல் செய்வது, வீட்டுப் பாடங்களை படிக்க வைப்பது, உறவினர் வீட்டு விசேஷங்கள் மறக்காமல் நினைவுபடுத்துவது, அவனால் முடியாத இடங்களுக்கு தான் சென்று வருவது என்று ராஜேஸ்வரியை வீட்டுப் பொறுப்புகள் அழுத்தின.
என்றைக்காவது இரவு நேரம் கிடைக்கும்போது, அவள் மடியில் படுத்துக்கொள்வான் முகேஷ்.
“நீங்க என்ன சின்னப் பிள்ளையா?” அவள் தள்ளிவிடுவாள்.
“ராஜி… நாம சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்கோம்…” என்று தன் வாழ்வின் கனவை அவளோடு பகிர்ந்துகொள்ள ஆரம்பிப்போம்.
“ஆரம்பிங்க… ஆரம்பிங்க…” – அவளுக்கு அதற்குமேல் அதைப் பற்றி பேச வராது.
இரவு கழியும்.
ராஜேஸ்வரி, அன்றாட வேலைகளின் சுமையோடும், முகேஷ், சொந்த நிறுவன கனவுகளோடும் எழுந்திருப்பார்கள்.
மூத்தவன் பிரசன்னாவை என்ஜினியரிங் படிக்க சேர்த்த பிறகு முகேஷ்,
“இனி நாம தனியா தொழில் ஆரம்பிக்கலாம்னு பார்க்கிறேன்,” என்றான்.
கிட்டத்தட்ட இருபத்தைந்து வருட அனுபவம். இதே நிறுவனத்தில் வேலை பார்த்தால் இன்னும் ஊதியம் கூடுவதற்கு வாய்ப்பு. போட்டி நிறுவனங்கள் இவன் தங்களிடம் வருவானா என்று காத்திருக்கின்றன. எல்லாம் அவனது தொழில் திறமைக்கும், ஈடுபாட்டுக்குமான மதிப்பு.
அலுவலகத்திற்கு பல மாடி அடுக்கில் ஓர் அடுக்கை வாடகைக்கு எடுத்தான். கையில் இருந்த பணத்தை போட்டான். தொழில் பழகுநர்களான இன்டெர்ன்களை அமர்த்தினான். தொழில் தளத்தில் தனக்கு இருந்த பெயரையும் அறிமுகத்தையும் பயன்படுத்தி புராஜக்ட்களை பிடித்தான்.
இன்னும் தூக்கம் தொலைத்தான். இரவு முழுவதும் கணினியில் உட்கார்ந்திருந்தான். பகல் பொழுதுகளில் வேலை நடக்கும் இடங்களுக்கும், வாடிக்கையாளர்களின் அலுவலகங்களுக்கும் அலைந்தான்.
“ராஜி…” எப்போதாவது தன் தொழிலை பற்றி பேச அழைக்கும்போது ராஜேஸ்வரி குடும்ப சலிப்புகளை கொட்டிவிட்டு போவாள்.
நிறுவனம் ஆரம்பித்து முதல் வருடம் ஓடியாடி மிகவும் சோர்ந்துபோனான் முகேஷ். பெரிய அளவில் முதலீடு செய்ய முடியாதது பெரிய பாரமாக இருந்தது. ஆனால், இரண்டாவது வருடம் பரபரப்பு குறைந்தது. முகம் கொஞ்சம் தெளிவானது. ராஜேஸ்வரி நினைவுபடுத்தும்போதெல்லாம் உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு அவளுடன் தவறாமல் சென்றான்.
மூத்தவனின் கல்லூரியிலும், மகளின் பள்ளியிலும் பெற்றோர் கூட்டங்களில் ராஜேஸ்வரியுடன் கலந்துகொண்டான்.
“என்ன இப்போ கொஞ்சம் ஃப்ரீயா இருக்கீங்க?” கேட்டாள் ராஜேஸ்வரி.
“ஆமாமா… புதுசா ஒரு பொண்ணு வேலைக்கு வந்திருக்கிறாள். கொஞ்சம் எக்ஸ்பிரீயன்ஸ்… மூளை ஜாஸ்தி… எதையும் சொன்னதும் புரிஞ்சுகிறா… பாதி வேலையை அவளே முடிச்சிடுறா..” என்றான் முகேஷ்.
“பொண்ணா… பொண்ணுங்க இந்த ஃபீல்டுல இருக்காங்களா..?” ஆச்சரியமாக கேட்டாள் ராஜி.
“ஏன் இல்லாமல்…? குறைவுதான்… ஆனால் இன்ட்ரஸ்ட் இருந்தால் தாக்குப்பிடிக்கலாம்…” என்றான் முகேஷ்.
புவனாவும் கனவுகளின் பாரத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தாள். என்ன படிக்க வைப்பதென்று தெரியாத பெற்றோர். டிப்ளமோவை இவளே தேர்வு செய்தாள். தேவையானவற்றை தேடி தேடி படித்தாள். கூச்சமில்லாமல் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொண்டாள்.
முகேஷ், ஆள்கள் தேவை என்று இணையத்தில் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்தாள்.
வந்திருந்தவர்களில் புவனா மட்டுமே துறைசார்ந்த அறிவு கொண்டவளாயிருந்தாள். அவளது துடிப்பு அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது.
“எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீங்க…?” கேட்டான்.
“இப்போ வாங்குறதை விட கொஞ்சும் கூடுதலா சார்… அப்பா, அம்மாவை நான்தான் பார்த்துக்கணும்… வேலையும் கூடுதலா வேணும் சார்… நிறைய கத்துக்க ஆசை…” என்றாள்.
இதையும் வாசியுங்கள்: சிறுகதை: செத்துவிட தோணுதடி
நிர்வாகத்தை மட்டும் முகேஷ் பார்த்துக்கொண்டால் போதும் என்றானது. தொழில் சார்ந்த எல்லாவற்றையும் புவனாவே செய்து முடித்து அவன் பார்வைக்கு சமர்ப்பித்தாள்.
புராஜக்ட் தொடர்பான எல்லா கேள்விகளையும் அவளே எழுப்பி பதில் பெற்று தன்னுடைய கருத்துகளை எழுதி முகேஷுக்கு அனுப்பி வைத்தாள். வேலை நடக்கும் இடங்களுக்குச் சென்று விசிட்டிங் ரிப்போர்ட்களை சரி பார்த்தாள்.
எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், இரவு தாமதமாக சென்றாலும் காலை சரியாக 9 மணிக்கு அலுவலகத்துக்குள் புத்துணர்வோடு வருகிறாள்.
முதலில் அவளைப் பார்த்து வியந்த முகேஷ், அவளது கற்றுக்கொள்ளும் வேகத்தைக் கண்டு மலைத்தான். மெல்ல நிர்வாக வேலைகளிலும் சந்தேகம் கேட்டு அவற்றையும் செய்ய தொடங்கினாள்.
முகேஷுக்கு இப்போது நல்ல வருமானம். தன் கனவை எட்டிய திருப்தி அவனுக்கு. சொந்த தொழில், திறமைக்கு தீனி, குடும்ப தேவைக்கான வருமானம், சமுதாயத்தில் அந்தஸ்து… எல்லாம் கிடைத்துவிட்டது அவனுக்கு.
முகேஷ் அநேக நாள்கள் இலக்கு வைத்து முயற்சித்துக்கொண்டிருந்த புராஜக்ட் திருச்சியில் கிடைத்தது. முகேஷ் மகிழ்ச்சியாக இருந்தான்.
“திருச்சியிலேயே லோக்கல் ஆட்களை எடுத்திரலாம்… எப்படியும் இரண்டு வருஷம் புராஜக்ட் போகும். இரண்டு வருஷம்னு சொல்லியே எடுக்கலாம்…” என்றான் புவனாவிடம்.
அப்படியே விளம்பரமும் செய்து, நேர்முகத் தேர்வுக்கு ஏற்பாடு செய்தான். திருச்சியில் மூன்று நாள் நேர்முகத் தேர்வு நடத்த வேண்டும்.
“வாயேன்” என்று அழைத்தான் புவனாவை.
உடனே புறப்பட்டாள் அவனுடன். காரில் போகும்போதே புராஜக்ட்டை பற்றி விவாதித்துக்கொண்டார்கள். வந்திருந்த விண்ணப்பங்களில் எவற்றை தெரிந்தெடுத்திருக்கிறேன்; ஏன் தெரிவு செய்திருக்கிறேன் என்றெல்லாம் முகேஷிடம் கூறினாள். முழு திருப்தி அவனுக்கு.
இருவருக்கும் அறைகளை ஹோட்டலில் பதிவு செய்திருந்தான். நேர்முகத் தேர்வு நடத்துவதற்கு ஹால் பதிவு செய்திருந்தான்.
மூன்று நாள்களில் ஓரளவுக்கு ஆயத்தங்கள் முடிந்துவிட்டன. அடுத்த வாரத்திலிருந்து வேலையை தொடங்கலாம்.
புவனா அப்படி ஒன்றும் அழகி அல்ல. ஆனால் திருத்தமாக இருந்தாள். நேரம் செலவழித்து தன்னை சிங்காரித்துக் கொள்பவல்ல; ஆனால், நேர்த்தியாக தோற்றமளித்தாள். கேட்கும் கேள்விகளுக்கு முகேஷ் விரிவாக பதில் சொல்லி சந்தேகத்தை தீர்க்கும்போது விழிகளை விரித்து வியந்தாள்.
திருச்சி புராஜக்ட்டின் வெற்றி முகேஷை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றது.
“எல்லாம் உன்னால்தான்… உனக்கு என்ன டிரஸ் வேணுமோ எடுத்துக்கோ…” என்றான் உற்சாகமாக. எடுத்துக்கொண்டாள் சந்தோஷமாக.
“வேறு என்ன வேணும்…?” என்றான்.
“வேறு என்ன… புராஜக்ட் நல்லா போனா போதும்..” புன்னகைத்தாள் புவனா.
முகேஷுக்கு உலகமே அழகாக தெரிந்தது. புவனாவும் அழகாக தெரிந்தாள்.
திருச்சியிலிருந்து திரும்பிய அன்று முகமே சரியில்லை முகேஷுக்கு.
“என்னங்க… புராஜக்ட்ல ஏதாவது பிரச்னையா?” கேட்டாள் ராஜேஸ்வரி.
மறுப்பாக தலையசைத்தான்.
“புவனா என்ன செய்வாள்? வீட்டில் வந்து சத்தம் போடுவாளோ? பணம் கேட்டு மிரட்டுவாளோ? போலீசில் புகார் கொடுப்பேன் என்பாளோ?” முகேஷின் மனதுக்குள் ஏராளமான கேள்விகள்.
இதையும் வாசியுங்கள்: சிறுகதை: பால்கனி நிலவு
வீட்டிலும் இருக்கமுடியாமல் அலுவலகத்திற்குச் சென்றான் முகேஷ். புவனா ஏற்கனவே வந்திருந்தாள். தலைக்கு குளித்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. இயல்பாகவே வேலை செய்தாள்.
திருச்சி புராஜக்ட்டின் அடுத்த கட்ட பணிகளுக்கான ஃபைலை மேசையில் கொண்டு வைத்தாள்.
இரண்டு மணி நேரமாக யாரையும் அழைக்காததால் முகேஷின் அறையை தட்டினாள் புவனா. பதிலில்லை. தள்ளினாள் கதவு திறந்துகொண்டது. நாற்காலியிலிருந்தபடி மேசையின்மீது சரிந்திருந்தான் முகேஷ். திருச்சி புராஜக்ட் ஃபைல் கீழே விழுந்து கிடந்தது. அதன் அருகே ஒரு பாட்டில் திறந்து கிடந்தது.
உங்கள் கருத்துகளை கமெண்ட் செக்சனில் பதிவு செய்யுங்கள்.
கதைகளை உடனுக்குடன் வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; டுவிட்டரில் பின் தொடருங்கள்.